அதிகாரம்: அல்முஜாதல
அருளப்பெற்ற இடம்:
மதீனா | வசனங்கள்: 23
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- தன் கணவனைப் பற்றி உம்மிடம் வாதாடி, அல்லாஹ்விடம் முறையிடுபவளின் கூற்றை அல்லாஹ் செவியேற்றுள்ளான். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலையும் செவியேற்றுள்ளான்1. நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான்.
- உங்களுள் எவர்கள் தம் மனைவிகளைத் தாய் என்றழைத்து விடுகின்றனரோ, அவர்களின் தாயாக அவர்கள் ஆகிவிடுவதில்லை. அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் தாய்மார்கள் ஆவர். நிச்சயமாக அவர்கள் விரும்பத்தகாததும், பொய்யானதுமான கூற்றைக் கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை அழித்து விடுபவனும், மிக்க மன்னிப்பவனும் ஆவான்.
- தங்கள் மனைவிகளைத் தாயென்றழைத்துப் பின்னர் தாங்கள் கூறியதன்பால் மீண்டும் திரும்பி விடுபவர்கள்2, (கணவன், மனைவியாகிய) அவ்விருவரும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இது உங்களுக்குக் கூறப்படுகின்ற அறிவுரையாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான்.
- ஆனால் (அடிமையைப்) பெறாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்னர் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு செய்ய இயலாதவர், அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். இ(க் கட்டளையான)து, நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொள்வதற்கேயாகும். இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும். நிராகரிப்பாளர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்ப்பவர்கள், இவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவுபடுத்தப்படுவர். நாம் ஏற்கனவே தெளிவான அடையாளங்களை இறக்கியுள்ளோம். மேலும் நிராகரிப்பவர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையுண்டு.
- அல்லாஹ் அவர்கள் யாவரையும் ஒன்றுதிரட்டி எழுப்பும் நாளில், அவர்கள் செய்ததைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் அதன் கணக்கை வைத்துள்ளான். ஆனால் அவர்கள் அதை மறந்து விட்டனர். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் சாட்சியாவான். ரு1
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவற்றை அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா? மூவரின் ரகசிய ஆலோசனையில் , நிச்சயமாக அவர்களில் நான்காவதாக அவன் இருக்கின்றான். ஐவரி(ன் இரகசிய ஆலோசனையி)ல் நிச்சயமாக (அவர்களில்) ஆறாவதாக அவன் இருக்கின்றான். இதைவிடக் குறைவானவர்கள் அல்லது அதிகமானவர்கள் எங்கிருந்தாலும் சரியே, அவன் அவர்களுடன் இருக்கின்றான். பின்னர் அவர்கள் செய்தவற்றைப் பற்றி மறுமைநாளில் அவர்களுக்கு அவன் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
- தாங்கள் இரகசிய (சதி) ஆலோசனைகளிலிருந்து தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதன் பக்கமே அவர்கள் மீண்டும் திரும்பி பாவம், வரம்பு மீறுதல், தூதருக்குக் கீழ்ப்படியாமலிருத்தல் ஆகியவை பற்றி இரகசிய ஆலோசனை செய்பவர்களை நீர் பார்த்ததில்லையா? அவர்கள் உம்மிடம் வரும் போது, அல்லாஹ் வாழ்த்தாததைக் கொண்டு அவர்கள் உம்மை வாழ்த்துகின்றனர்3. (இவ்வாறு) நாம் கூறுவதனால், அல்லாஹ் ஏன் நமக்குத் தண்டனையளிப்பதில்லை என்று அவர்கள் தங்களுக்குள்ளேயே கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைவார்கள். அது மிகக் கெட்ட சேருமிடமாகும்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இரகசிய ஆலோசனை நடத்தும் போது பாவம், வரம்பு மீறுதல், தூதருக்குக் கீழ்ப்படியாமலிருத்தல் ஆகியவை பற்றி இரகசிய ஆலோசனை நடத்தாதீர்கள். மாறாக நன்மை, இறையச்சம் ஆகியவற்றி(னை அடைவத)ற்காக ஆலோசனை நடத்துங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப் படுவீர்கள்.
- (தீய நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்ற) இரகசிய ஆலோசனை, நம்பிக்கை கொண்டவர்களைக் கவலைக்குள்ளாக்குவதற்காக, ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகின்றதாகும். ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி, அவனால் அவர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (உங்கள்) அவைகளில் (அகன்று) இடம் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்படும் பொழுது, நீங்கள் அகன்று (இடம்) கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மிகுதியாக இடமளிப்பான். நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள் என்று உங்களிடம் கூறப்படும் போது, நீங்கள் எழுந்து சென்று விடுங்கள். உங்களுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், ஞானம் வழங்கப்பெற்றவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தூதரிடம் தனிமையில் ஆலோசனை செய்யும் போது, அந்த ஆலோசனைக்கு முன்னர் எதனையாவது தானம் வழங்குங்கள். அது உங்களுக்கு மிகச்சிறந்ததும், மிக்க தூய்மையானதுமாகும். ஆனால் நீங்கள் (வழங்குவதற்கு எதனையும்) பெறவில்லையாயின் (அதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம்). நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- ஆலோசனை செய்வதற்கு முன்னர், தானதர்மம் வழங்குவது பற்றி நீங்கள் பயந்து விட்டீர்களா? நீங்கள் அவ்வாறு செய்யாமலே அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்துள்ளான். எனவே நீங்கள் தொழுகையை நிறைவேற்றி, ஸக்காத்து கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான். ரு2
- அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான மக்களுடன் நட்பு கொண்டிருப்பவர்களை நீர் பார்த்ததில்லையா? அத்தகையோர் உங்களைச் சேர்ந்தவர்களும் இல்லை; அவர்களைச் சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே பொய்மேல் ஆணையிடுகின்றனர்.
- அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான தண்டனையை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகக் கெட்டதாகும்.
- அவர்கள் தங்கள் ஆணைகளை(த் தங்கள் பொய்களுக்கு) ஒரு கேடயமாக ஆக்கி (அவற்றின் மூலம் மக்களை) அல்லாஹ்வின் வழியிலிருந்து தடுக்கின்றனர். எனவே இழிவுபடுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
- அவர்களது செல்வங்களும், அவர்களது பிள்ளைகளும் அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர்; அதில் அவர்கள் நெடுங்காலம் இருப்பார்கள்.
- அல்லாஹ் அவர்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி எழுப்பும் நாளில், அவர்கள் உங்களிடம் ஆணையிடுவது போன்று, அவனிடமும் ஆணையிட்டு மிக உறுதி வாய்ந்த (சரியான) ஒன்றன் மீது தாங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக அவர்கள் பொய்யர்களேயாவார்கள்.
- அவர்கள் மேல் ஷைத்தான் வெற்றி பெற்று, அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டவாளிகள் ஆவார்கள்.
- நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்ப்பவர்கள், மிகவும் இழிவடைந்தவர்களில் உள்ளவர்களாவார்கள்.
- நிச்சயமாக நானும் எனது தூதர்களும் வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் விதித்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் மிக்கவனும், வெற்றிக்குரியவனுமாவான்.
- அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களாகவும், (அதே வேளையில்) அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்ப்பவர்களை நேசிப்பவர்களாகவும் இருக்கும் எந்தச் சமுதாயத்தினரையும் நீர் காண மாட்டீர். (எதிர்க்கும்) அவர்கள் (நம்பிக்கை கொண்ட) அவர்களின் தந்தைகளாகவோ, மகன்களாகவோ, சகோதரர்களாகவோ, உறவினர்களாகவோ இருப்பினும் சரியே. இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் (உண்மையான) நம்பிக்கையைப் பதித்து, தன்னிடமிருந்துள்ள சொல்லைக் கொண்டு அவர்களை உறுதிப்படுத்தி, மேலும் அவர்களைத் தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அல்லாஹ் அவர்களைப் பற்றித் திருப்தி கொண்டுள்ளான்; அவர்கள் அவனைப் பற்றித் திருப்தி கொண்டுள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கூட்டத்தினராவர். அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்களாவர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ரு3