59- அல்ஹஷ்ர்

அதிகாரம்: அல்ஹஷ்ர்
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள்: 25

பிரிவுகள்: 3

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ளவையெல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. அவன் வல்லோனும், ஞானமிக்கோனுமாவான். 
  3. அவனே வேதத்தையுடையவர்களுள் நிராகரிப்பவர்களை, முதன்முறையாக,  நாடுகடத்தலின் போது அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றினான்1. அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை. அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களின் கோட்டைகள், அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அல்லாஹ் அவர்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவர்களிடம் வந்து2, அவர்களின் உள்ளங்களில் திகிலைப் போட்டான். அவர்கள் தங்கள் கைகளாலும், நம்பிக்கையாளர்களின் கைகளாலும் தங்கள் வீடுகளை அழித்தனர். எனவே கண்ணுள்ளவர்களே! படிப்பினையைப் பெற்றுக் கொள்ளுங்கள். 
  4. நாடு கடத்தப்படுவதை3 அல்லாஹ் அவர்களுக்கு விதிக்காமல் இருந்திருந்தால், அவன் அவர்களுக்கு இவ்வுலகிலும் தண்டனை வழங்கியிருப்பான். மேலும் மறுமையில் அவர்களுக்கு நரகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
  5. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்ததே இதற்குக் காரணம். அல்லாஹ்வை எதிர்ப்பவன், நிச்சயமாக அல்லாஹ் கடினமான தண்டனையளிப்பவன் ஆவான். (என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). 
  6. வரம்பு மீறியவர்களை இழிவுபடுத்துவதற்காகவும், அல்லாஹ்வின் கட்டளையினாலும் அன்றி, நீங்கள் எந்தப் பேரீச்ச மரத்தையும் வெட்டவோ, அதனை வேர்களில் நிற்குமாறு விட்டு வைக்கவோ இல்லை4. 
  7. அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிடமிருந்து வழங்கிய போர்க்களப் பொருள்களுக்காக5, நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. எனினும் அல்லாஹ் தன் தூதர்களுக்கு, தான் நாடுபவர்கள் மேல் அதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான். 
  8. நகரங்களின் மக்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு வழங்கியவைகள்6, அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும். ஏனெனில் அவை உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையே (மட்டும்) சுற்றி வரக்கூடாது. தூதர் உங்களுக்கு வழங்குவதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களை அவர் தடுக்கின்றாரோ, அதிலிருந்து விலகி நில்லுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடினமான தண்டனையளிப்பவன் ஆவான். 
  9. (இந்தப் பொருள்கள்) தங்கள் வீடுகளிலிருந்தும், தங்கள் உடைமைகளிலிருந்தும் வெளியேற்றப்பட்ட அகதிகளான ஏழைகளுக்கும் உரியவையாகும். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், அவனது திருப்தியையும் விரும்பி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களே (தங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாவார்கள். 
  10. (அப்பொருட்கள், மதீனாவில் தங்கள்) வீட்டை அமைத்து, அவர்களுக்கு முன்னர் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் (உரியவையாகும்). இவர்கள் தங்களிடம் அகதிகளாக வருபவர்களை நேசிக்கின்றனர். (அகதிகளாகிய) அவர்களுக்கு வழங்கப்பட்டவை பற்றித் தங்கள் நெஞ்சங்களில் இவர்கள் எந்த விருப்பமும் கொண்டதில்லை. மாறாக, தாங்கள் வறுமையில் இருந்தும், தங்களை விட மற்றவர்களுக்கு (அகதிகளுக்கு) இவர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். தங்கள் உள்ளத்தின் பேராசையிலிருந்து விடுவிக்கப்படுபவர்களே வெற்றி பெறுபவர்களாவர்.
  11. மேலும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் (இவ்வாறு) கூறுகின்றனர்: எங்கள் இறைவா! எங்களையும், எங்களுக்கு முன்னர் நம்பிக்கை கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. மேலும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு எதிராக எங்கள் உள்ளங்களில் எத்தகைய வெறுப்பும் ஏற்படாதிருக்கச் செய்வாயாக; எங்கள் இறைவா! நிச்சயமாக நீ அதிகமாகப் பரிவு காட்டுபவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவாய்8. ரு1 
  12. நயவஞ்சகர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வேதத்தையுடையவர்களைச் சேர்ந்த, நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களிடம்: நீங்கள் (மதீனாவிலிருந்து) வெளியேற்றப்பட்டால், நிச்சயமாக நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம்; உங்களுக்கு எதிராக எவருக்கும் ஒருபோதும் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம்; உங்களுடன் போர் செய்யப்பட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்களேயாவர் என்று அல்லாஹ் சாட்சி பகர்கின்றான். 
  13. (வேதத்தையுடையவர்களாகிய) அவர்கள் வெளியேற்றப்பட்டால், (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் ஒருபோதும் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களுடன் போர் செய்யப்பட்டால், இவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக இவர்கள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பின்னர் இவர்களுக்கு (ம்) உதவி செய்யப்படமாட்டாது. 
  14. (நம்பிக்கை கொண்டவர்களே!) உண்மையிலேயே அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட, உங்களைப் பற்றிய அச்சமே மிக அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதேயாகும். 
  15. அவர்கள் உறுதியான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட நகரங்களில் அல்லது மதில்களுக்குப் பின்னால் இருந்தே தவிர, ஒருங்கிணைந்து உங்களுடன் போர் செய்யவே மாட்டார்கள். அவர்களின் போர், அவர்களுக்கிடையிலே மிகக் கடினமாக உள்ளது. நீர் அவர்களை ஒன்றுபட்டிருப்பதாகக் காண்கின்றீர். ஆனால் அவர்களின் உள்ளங்கள் சிதறிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம், அவர்கள் அறிவற்ற மக்களாக இருப்பதேயாகும். 
  16. இவர்களின் நிலை, இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் சென்றவர்களின் நிலையைப் போன்றதாகும். அவர்கள் தங்கள் (தீய) செயல்களுக்கான, தீய விளைவுகளைச் சுவைத்தனர். அவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை உண்டு. 
  17. (மேலும் நயவஞ்சகர்களாகிய அவர்களின் நிலை) ஷைத்தானைப் போன்றதாகும். அவன் மனிதனிடம், நீ நிராகரித்து விடு என்று கூறுகின்றான். ஆனால் அவன் நிராகரித்ததும், ஷைத்தான் அவனிடம், நான் உன்னிடமிருந்து விலகிக் கொள்கிறேன்; எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகிறேன் எனக் கூறுகின்றான். 
  18. அவ்விருவரின் முடிவு என்னவென்றால், அவர்களிருவரும் நரகத்தில் நீண்ட காலம் இருப்பார்கள்; அநீதியிழைப்பவர்களுக்குரிய கூலி இதுவே. ரு2 
  19. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான். 
  20. அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல், நீங்கள் ஆகி விட வேண்டாம். அ(வர்கள் மறந்த)தனால், அவன் அவர்களைத் தங்களையே மறக்கும்படிச் செய்து விட்டான்9. அவர்களே கட்டுப்படாதவர்கள் ஆவர்.
  21. நரகத்திற்குரியவர்களும், சுவர்க்கத்திற்குரியவர்களும் சமமானவர்கள் இல்லை. சுவர்க்கத்திற்குரியவர்களே வெற்றி பெற்றவர்களாவார்கள். 
  22. இந்தக் குர்ஆனை ஏதாவதொரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால்10, நிச்சயமாக நீர் அதனைப் பணிவுள்ளதாகவும், அல்லாஹ்வின் பயத்தால் பல்வேறு துண்டுகளாகத் தகர்ந்து விடக்கூடியதாகவும் கண்டிருப்பீர். மக்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அவர்களுக்காக நாம்  விளக்கும் உவமைகளே இவை. 
  23. அவனே அல்லாஹ்; அவனையன்றி வேறு வணக்கத்திற்குரியவன் இல்லை. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன் ஆவான். அவன் அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  24. அவனே அல்லாஹ்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இல்லை. அவன் அரசன்; தூயவன்; சாந்தியின் பிறப்பிடம்; பாதுகாப்பு அளிப்பவன்; கண்காணிப்பவன்; வல்லவன்; உடைந்த உள்ளங்களை இணைப்பவன்; மிக மேலானவன். அவர்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றவற்றிலிருந்து அல்லாஹ் தூயவன். 
  25. அவனே அல்லாஹ்; படைப்போன்; ஆக்குவோன்; (எல்லாவற்றிற்கும் அவற்றின் நிலைக்கேற்ப) வடிவமைப்போன் ஆவான். மிகச்சிறந்த பண்பு(பெயர்) கள் அவனுக்கே உரியன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அவனது தூய்மையினை எடுத்துரைக்கின்றன. அவன் வல்லவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். ரு3
Powered by Blogger.