அதிகாரம்: அல்முல்க்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 31
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- ஆட்சி எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மிகப்பெரும் அருளுக்குரியவனும், எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனுமாவான்.
- உங்களுள் எவர் சிறந்த செயல்களை உடையவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்துள்ளான். அவன் வல்லமை மிக்கவனும், மிக்க மன்னிப்பவனுமாவான்.
- அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்துள்ளான். அளவற்ற அருளாள(னான இறைவ)னது படைப்பில் உம்மால் எந்தக் குறைபாட்டையும் காண இயலாது. மீண்டும் பார்ப்பீராக! (அதில்) ஏதேனும் குறைபாடு உமக்குத் தெரிகிறதா?
- பின்னர் நீர் மீண்டும் மீண்டும் (துருவித் துருவிப்) பார்ப்பீராக; இறுதியில் உமது பார்வை தோல்வியடைந்து, களைப்படைந்தவாறு உம்மிடமே திரும்பி விடும்.
- நிச்சயமாக நாம் கீழ்வானத்தை விளக்குகளைக் கொண்டு அழகுபடுத்தி, ஷைத்தான்களை விரட்டும் கருவிகளாக அவற்றை அமைத்து, அவர்களுக்காக சுடர்விட்டெரியும் நெருப்புத் தண்டனையை ஆயத்தப்படுத்தியுள்ளோம.
- மேலும் தங்கள் இறைவனை மறுப்பவர்களுக்கு நரகத் தண்டனை உண்டு. அது மிகமிகக் கெட்ட சேருமிடமாகும்.
- அதில் அவர்கள் எறியப்படும் போது, அது கொதித்துக் கொண்டிருப்பது போல் அதன் பேரிரைச்சலை அவர்கள் கேட்பார்கள்1.
- அது கோபத்தால் வெடித்தே விடலாம். (அநீதியிழைத்தவர்களின்) ஏதேனும் ஒரு கூட்டத்தினர் அதில் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலர் அவர்களிடம், எச்சரிப்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்.
- ஆம்; நிச்சயமாக எச்சரிப்பவர் ஒருவர் வந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்ப்படுத்தி, அல்லாஹ் எதனையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் தான் இருக்கின்றீர்கள் என்று கூறினோம் என அவர்கள் கூறுவர்.
- மேலும் அவர்கள், நாங்கள் செவிசாய்த்திருந்தால் அல்லது அறிவுடைமையைப் பெற்றிருந்தால் நாங்கள் ஒருபோதும் சுடர்விட்டெரியும் நெருப்பிற்குரியவர்களுக்கிடையே இருந்திருக்க மாட்டோம் எனக் கூறுவர்.
- இவ்வாறாக, அவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்வார்கள். எனவே, சுடர்விட்டெரியும் நெருப்பிற்குரியவர்கள் சாபத்திற்குள்ளாக்கப்படுவார்கள்.
- நிச்சயமாகத் தங்கள் இறைவனுக்கு மறைமுகமாக அஞ்சுபவர்களுக்கு மன்னிப்பும், பெரும் நற்பலனும் உண்டு.
- நீங்கள் கூறுவதை மறைத்தாலும், அதனை நீங்கள் வெளிப்படையாகக் கூறினாலும், அவன் (உங்கள்) நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கு அறிகின்றான்.
- (உங்களைப்)படைத்தவன் (அதனை) அறியமாட்டானா? அவன் மிக நுட்பமான அனைத்தையும் அறிந்தவனும், நன்கு தெரிந்திருப்பவனுமாவான். ரு1
- அவனே உங்களுக்காகப் பூமியை வாழ்வதற்குத் தகுந்த முறையில் ஆக்கியுள்ளான். எனவே நீங்கள் அதன் பரந்த வழிகளில் (எங்கு விரும்பினாலும்) செல்லுங்கள்; மேலும் அவனது உணவிலிருந்து உண்ணுங்கள். மேலும் அவனிடமே உயிர் பெற்றெழுந்து செல்ல வேண்டியதுள்ளது.
- வானத்திலிருப்பவனைப் பற்றி, அவன் உங்களைப் பூமியில் அமிழ்ந்து விடுமாறு செய்யமாட்டானென்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? இதோ! அது (அதாவது பூமி) சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்.
- வானத்திலிருப்பவனைப் பற்றி, அவன் உங்கள் மீது கல்மாரியைப் பொழியமாட்டானென்று நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா? பின்னர் நீங்கள் எனது எச்சரிக்கை எவ்வாறு (கொடியதாக) இருந்ததென்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
- நிச்சயமாக, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (எம் தூதர்களைப்) பொய்ப்படுத்தினர். பின்னர் எனது தண்டனை எவ்வாறு (கடினமானதாக) இருந்தது? (என்பதனை அவர்கள் காணவில்லையா?)
- அவர்கள் தங்களுக்கு மேல் பறவைகளை, அவை தம் இறக்கைகளை அசைக்காமல் விரித்துக் கொண்டிருப்பதையும், பின்னர் (இரையின் மீது துரிதமாக இறங்குவதற்காக அவற்றைச்) சுருக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாள(னாகிய இறைவ)னே அவற்றை நிறுத்தி வைக்கின்றான்2. நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்க்கின்றான்.
- உங்கள் படையினர்களான அவர்களால், அளவற்ற அருளாள(னான இறைவ)னுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்ய இயலுமா? நிராகரிப்பவர்கள் ஏமாற்றத்திற்கே ஆளாகியுள்ளனர்.
- அவன் தனது உணவை (அதாவது உணவளித்தலை) நிறுத்தி விட்டால், உங்களுக்கு (வேறு) எவன் உணவளிப்பான்? உண்மையிலேயே அவர்கள் வெறுப்பதிலும், எதிர்ப்பதிலும் மிக அதிகமாகப் பிடிவாதம் கொள்கின்றனர்.
- என்ன? முகங்குப்புற விழுந்து செல்பவன் மிகவும் நேரான வழியில் இருக்கிறானா? அல்லது நேரான பாதையில் நிமிர்ந்து செல்பவனா?
- நீர் கூறுவீராக! அவனே உங்களைப் படைத்து, உங்களுக்காகக் காதுகளையும், கண்களையும், உள்ளங்களையும் உண்டு பண்ணினான். (ஆனால்) நீங்கள் அறவே நன்றி செலுத்துவதில்லை.
- நீர் கூறுவீராக: அவனே உங்களைப் பூமியில் பல்கிப் பெருகச் செய்தான். மேலும் அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
- நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்) என்று அவர்கள் கூறுகின்றனர்.
- நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடம் தான் உள்ளது. நான் மிகத் தெளிவான எச்சரிப்பவனேயாவேன்.
- அவர்கள் அதனை அருகில் காணும் போது, நிராகரிப்பவர்களின் முகங்கள் ஆழ்ந்த துக்கத்தால் தாக்கப்பட்டதாகி விடும். (அப்போது) அவர்களிடம் நீங்கள் தொடர்ந்து கேட்டு வந்தது இதுதான் என்று கூறப்படும்.
- நீர் கூறுவீராக: என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்து விட்டால்3, அல்லது அவன் எங்களுக்கு கருணை காட்டினால், வேதனையளிக்கக்கூடிய தண்டனையிலிருந்து நிராகரிப்பவர்களைப் பாதுகாப்பவர் யார் என்பதை நீங்கள் எனக்குக் கூறுங்கள்.
- நீர் கூறுவீராக: அவன் அளவற்ற அருளாளனாவான்; அவனிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் அவனிடமே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே தெளிவான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.
- நீர் கூறுவீராக: உங்களுடைய நீர் (வீழ்ச்சி பூமியின் ஆழத்தில்) மறைந்து போய்விட்டால், பின்னர் பாய்ந்தோடும் (தூய்மையான) தண்ணீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் எவன்? என்பதை நீங்கள் எனக்குக் கூறுங்கள். ரு2