அதிகாரம்: அத் தக்வீர்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 30
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. சூரியன் மூடப்படும் பொழுது, 
  3. நட்சத்திரங்கள் மங்கலானவையாகி விடும் போது,
  4. மலைகள் அகற்றப்படும் பொழுது, 
  5. பத்து மாதம் கருக் கொண்ட பெண் ஒட்டகங்கள் கைவிடப்படும் பொழுது, 
  6. விலங்குகள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது, 
  7. கடல்கள் (அல்லது ஆறுகள் ஒன்று மற்றொன்றில்) பாயச் செய்யப் படும் பொழுது,
  8. (பல்வேறு இன) மக்கள் ஒன்று சேர்க்கபடும் பொழுது,
  9. உயிருடன் புதைக்கப்படும் பெண் குழந்தை பற்றிக் கேள்வி கேட்கப்படும் பொழுது,
  10. என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்? 
  11. நூல்கள் விரிவாகப் பரப்பப்படும் பொழுது,
  12. வானத்தின் தோல் உரிக்கப் படும் பொழுது,
  13. நரகம் சுடர்விட்டெரியுமாறு செய்யப்படும் பொழுது,
  14. சுவர்க்கம் நெருக்கமாக ஆக்கப்படும் பொழுது,
  15. பின்னர் ஒவ்வோர் ஆன்மாவும் தான் கொண்டு வந்திருப்பதை அறிந்து கொள்ளும்.
  16. (நீங்கள் நினைப்பது போன்று) அன்று. பின் வாங்குபவற்றையும் நான் சாட்சியாகக் கூறுகின்றேன்.
  17. முன்னால் சென்று பின்னர் மறைந்து கொள்பவற்றையும் (நான் சாட்சியாகக் கூறுகின்றேன்).
  18. முடிவடையப் போகும் இரவையும்
  19. மூச்சு விடத் தொடங்கும் விடியற்காலையையும் (நான் சாட்சியாக்கிக் கூறுகின்றேன்:)
  20. நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது, மகிமைக்குரிய ஒரு தூதரின் வசனமாகும்.
  21. அவர் வலிமையுடையவரும், அரியணைக்குரிய (இறை)வனிடத்தில் மாபெரும் பதவியைப் பெற்றவரும், 
  22. கீழ்படிதலுக்கு உரியவரும் அவ்வாறே நம்பிக்கைக் குரியவருமாவார்.
  23. உங்களுடைய தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
  24. மேலும் நிச்சயமாக அவர் அவனைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்.
  25. மறைவானதைப் பற்றி அறிவிப்பதில் அவர் கருமித்தனமுள்ளவர் அல்லர்.
  26. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வார்த்தையுமன்று.
  27. எனவே, (இவ்வாறிருந்தும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
  28. இது உலகமனைத்திற்கும் நினைவூட்டக் கூடியதேயாகும்.
  29. (குறிப்பாக) உங்களுள் நேரான வழியில் செல்ல விரும்புவோருக்காக.
  30. அதே வேளையில் உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்பவேயன்றி நீங்கள் அவனை விரும்புவதில்லை. ரு1
Powered by Blogger.