அதிகாரம்: அல்ஹாக்க
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள்: 53
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நிச்சயம் நிகழக் கூடியது!
- நிச்சயம் நிகழக் கூடியது என்ன? (என்பது உங்களுக்குத் தெரியுமா?)
- மேலும் நிச்சயம் நிகழக் கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- ஸமூது (இனத்தினரு)ம், ஆது (இனத்தினரு)ம் தகர்த்து விடக்கூடிய பேராபத்தைப் பொய்ப்படுத்தினர்.
- எனவே ஸமூது (இனத்தினர்) மிகக் கடுமையான ஒரு தண்டனையைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
- மேலும் ஆது (இனத்தினர்) தொடர்ந்து வீசிய கடுமையான புயற்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
- அது அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் (வீசும்படிப்) பணிக்கப்பட்டது. எனவே அதில் அவர்கள், வீழ்ந்து கிடக்கும் பேரீச்ச மரங்களின் வெற்றுத் தண்டுகள் போன்று முற்றிலும் வீழ்த்தப்பட்டவர்களாக, நீர் அம்மக்களைக் காண்கிறீர்.
- (செவியேற்பவரே!) அவர்களுள் எவராவது எஞ்சியிருப்பதை நீர் காண்கின்றீரா?
- ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், மேலும் கவிழ்க்கப்பட்ட நகரங்க(ளுக்குரிய லூத்துவின் சமுதாயத்தினர்க)ளும் பாவங்கள் செய்து வந்தனர்.
- அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். எனவே அவன் அவர்களை, எப்பொழுதும் பெருகிக் கொண்டேயிருக்கும் தண்டனையைக் கொண்டு பிடித்தான்.
- (நூஹ்வின் காலத்தில்) தண்ணீர் மேலே உயர்ந்த போது, நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்.
- இதனை நாம் உங்களுக்கு ஒரு நினைவூட்டுதலாக ஆக்கவும்1, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் காதுகள் இதனை ஞாபகத்தில் கொள்ளவுமே செய்தோம்.
- எக்காளத்தில் (வேகமான) ஒரே ஒரு காற்று ஊதப்படும் போது2,
- மேலும் பூமியும், மலைகளும் புரட்டப்பட்டு, ஒரே ஒரு மோதலில் அவை தூள் தூளாக ஆக்கப்படும்3.
- அந்நாளில் (அந்தப் பெரும்) நிகழ்ச்சி நேரிடும்4.
- வானம் பிளந்து விடும்5. அந்நாளில் அது முற்றிலும் நைந்ததாகி விடும்.
- வானவர்கள் அதன் விளிம்புகளில் (நின்று கொண்டு) இருப்பார்கள்6. அந்நாளில் உமது இறைவனது அரியணையை எட்டுபேர்7 சுமந்து கொண்டிருப்பார்கள்.
- அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டு வரப்படுவீர்கள். உங்கள் இரகசியங்களுள் எதுவும் மறைந்ததாக இருக்காது8.
- பின்னர் எவரது வலக்கையில் அவருடைய (செயல்களின்) பதிவேடு கொடுக்கப்படுமோ அவர் (மற்றவர்களிடம்) கூறுவார். வாருங்கள்; என் பதிவேட்டைப் படித்துப் பாருங்கள்; 9
- எனக்குரிய கேள்வி கணக்கை நான் சந்திப்பேன் என்று நிச்சயமாக நான் உறுதி கொண்டிருந்தேன்10.
- எனவே அவர் மிக இன்பமான வாழ்வை அனுபவிப்பார்.
- உயர்வான தோட்டத்தில்,
- அதன் பழக்குலைகள் (எளிதில் எட்டக்கூடியதாக) அருகில் இருக்கும்.
- கடந்த நாட்களில், நீங்கள் செய்த (நற்) செயல்களின் விளைவாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்; அருந்துங்கள் (என அவர்களிடம் கூறப்படும்).
- ஆனால் தனது (செயல்களின்) பதிவேடு தனது இடக்கையில் கொடுக்கப்படுபவன் கூறுவான்: அந்தோ! எனது பதிவேடு தரப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
- மேலும் எனக்குரிய (கேள்வி) கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்க வேண்டுமே!
- அந்தோ! அ(ம் மரணமான)து என்னை முற்றிலும் அழித்திருக்க வேண்டுமே!
- என் செல்வம் (இன்று) எனக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை;
- எனது அதிகாரம் என்னை விட்டுச் சென்று விட்டது.
- (அப்பொழுது இறைவன் வானவர்களிடம் கூறுவான்:) நீங்கள் அவனைப் பிடித்து, அவனுக்கு விலங்கிடுங்கள்;
- பின்னர் அவனை நரகத்தில் எறிந்து விடுங்கள்.
- அடுத்து, எழுபது முழ நீளமுள்ள11 சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்:
- நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
- ஏழைகளுக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.
- எனவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இருக்கமாட்டான்12.
- கழிவுப்பொருள்களைத் தவிர அவனுக்கு வேறெந்த உணவும் இல்லை.
- குற்றவாளிகளே அதனை உண்பார்கள். ரு1
- எனவே நீங்கள் பார்ப்பதை நான் (என் கூற்றிற்குச்) சான்றாகக் காட்டுகிறேன்.
- மேலும், நீங்கள் பார்க்காததும் (அதாவது உள், வெளி நிலைகளும் இதற்கு சான்றாகும்).
- நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது மதிப்பிற்குரிய ஒரு தூதரின் (மூலம் கொண்டு வரப்பட்ட ) வசனமாகும்.
- இது ஒரு கவிஞரின் வசனமன்று; ஆனால் நீங்கள் அறவே நம்பிக்கை கொள்வதில்லை.
- இது குறி சொல்பவரின் வசனமும் அன்று, ஆனால் நீங்கள் அறவே புரிந்து கொள்வதில்லை.
- இது உலகங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
- அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்13,
- நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம்.
- பின்னர் நிச்சயமாக நாம் அவருடைய கழுத்துப் பெருநரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம்.
- உங்களுள் எவராலும் அவரை (எம்முடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது.
- நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது, இறையச்சமுடையவர்களுக்கு நினைவூட்டுதலாகும்.
- உங்களுள் (இதனை) பொய்ப்படுத்துபவர்களும் உள்ளனர் என்பதனை நிச்சயமாக நாம் அறிவோம்.
- நிச்சயமாக, இது நிராகரிப்பவர்களை மலைக்கச் செய்யும் ஒன்றாகும்14. (என்பதையும் நாம் அறிவோம்).
- நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.
- எனவே நீர் மகத்தான உம் இறைவனது பெயரைக் கொண்டு அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு2