அதிகாரம்: அல்கலம்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 53
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- மைக்கூடு, எழுதுகோல், அவர்கள் எழுதுவது ஆகியவை மேல் ஆணையாக1.
- நீர் உமது இறைவனது அருளால், பைத்தியக்காரர் அல்லர்.
- நிச்சயமாக ஒருபோதும் முடிவடையாத நற்பலன் உமக்கு (இறைவனிடத்தில்) உண்டு2.
- நிச்சயமாக நீர் மிகவும் உயர்வான நல்லொழுக்கத்தைப் பெற்றுள்ளீர்3.
- விரைவில் நீரும் கண்டு கொள்வீர்; அவர்களும் கண்டு கொள்வார்கள்.
- உங்களுள் எவர் (பைத்தியத்தால்) துன்பத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார் (என்பதைக் கண்டு கொள்வார்).
- அவனது வழியை விட்டுத் தவறித் செல்பவனை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகின்றான்; (நேரான) வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களையும் அவன் நன்கு அறிகின்றான்.
- எனவே, (உண்மையைப்) பொய்யாக்குபவர்களின் விருப்பங்களுக்கு நீர் இணங்காதீர்.
- தாம் இணங்கிச் செல்ல வேண்டுமாயின், நீரும் இணங்கிச் செல்ல வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.
- ஆணையிடுகின்ற எந்த இழிந்தவனையும் நீர் பின்பற்ற வேண்டாம்.
- அவன் புறங்கூறுபவன்; அவதூறு கூறித் திரிபவன்,
- நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; பாவம் செய்பவன்.
- தீய குணமுடையவன்; இதற்கு மேலாக நெறிதவறிப் பிறந்தவன்.
- இதற்குக் காரணம், அவன் செல்வங்களையும், குழந்தைகளையும் உடையவனாக இருப்பதேயாகும்.
- அவனுக்கு எம் வசனங்கள் ஓதிக் காட்டப்படும் போது, இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்று அவன் கூறுகின்றான்.
- விரைவில் நாம் அவனது மூக்கில் களங்கத்தை ஏற்படுத்துவோம்.
- தோட்டத்தின் சொந்தக்காரர்களை4 நாம் சோதனைக்கு ஆளாக்கியது போன்று, நிச்சயமாக நாம் இவர்களைச் சோதனைக்கு ஆளாக்குவோம். தாங்கள் கட்டாயம் அதனுடைய (பழங்கள் எல்லா)வற்றையும் காலையில் பறிக்க வேண்டும் என்று அவர்கள் சத்தியம் செய்து கொண்டனர்.
- மேலும் (இறைவன் நாடினால் என்று) அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறவில்லை.
- பின்னர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, உமது இறைவனிடமிருந்து தண்டனை ஒன்று அதற்கு இறங்கியது.
- காலையில் அது பழங்கள் பறிக்கப்பட்ட தோட்டம் போன்று காணப்பட்டது5.
- எனவே அவர்கள் அதிகாலையிலேயே ஒருவரையொருவர் அழைத்து,
- நீங்கள் பழங்களைப் பறிக்க வேண்டுமாயின், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குச் செல்லுங்கள் (என்றனர்).
- ஆகவே, அவர்கள் ஒருவருடன் ஒருவர் மெதுவாகப் பேசிக் கொண்டே சென்றனர்.
- எந்த ஏழையும் உங்களிடம் (அனுமதி பெறாமல்) இன்றைய தினம் அதில் நுழைந்து விடக்கூடாது என்றனர்.
- (இவ்வாறு) கருமித்தனம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அவர்கள் அதிகாலையில் சென்றனர்.
- ஆனால் அவர்கள் அதனைக் கண்ட போது; நிச்சயமாக நாம் (வழி) தவறி விட்டோம் என்று கூறினர்.
- அவ்வாறன்று, மாறாக, உண்மையிலேயே நாம் (எல்லாவற்றையும்) முற்றிலும் இழந்து விட்டோம் என்று அவர்கள் கூறினர்.
- அவர்களுள் சிறந்தவர், நீங்கள் ஏன் இறைவனின் தூய்மையினை எடுத்துரைப்பதில்லை என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்றார்.
- நம் இறைவன் (எல்லாக் குறைபாடுகளையும் விட்டுத்) தூய்மையானவனாவான்; நிச்சயமாக நாம் அநீதியிழைப்பவர்களாக இருக்கின்றோம் என்று அவர்கள் கூறினர்.
- பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் இகழ்ந்தவாறு, அவர்களுள் சிலர், மற்றுஞ்சிலரிடம் திரும்பினர்.
- மேலும்: நமக்கு அழிவு தான்! நிச்சயமாக நாம் கிளர்ச்சியாளர்களாக இருந்தோம் என்று அவர்கள் கூறினர்.
- (நாம் கழிவிரக்கம் கொண்டால்) நம் இறைவன் இதனை விடச் சிறந்த (தோட்டத்)தை நமக்குத் தந்து விடலாம்7. நிச்சயமாக நாம் நம் இறைவனிடம் பணிவுடன் மன்றாடுவோம்.
- (இவ்வுலகத்) தண்டனை அவ்வாறானதேயாகும். மறுமையின் தண்டனையோ மிகப் பெரியதாகும். அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! ரு1
- நிச்சயமாக, இறையச்சமுடையோருக்கு அவர்களின் இறைவனிடம் பேரின்பத் தோட்டங்கள் உள்ளன.
- குற்றவாளிகளை (நாம் நடத்துவதைப்) போன்று, (எமக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களை நாம் நடத்துவோமா?
- உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கின்றீர்கள்!
- உங்களுக்கு ஒரு வேதம் இருக்கிறதா? அதில் நீங்கள் (இதனை) படிக்கிறீர்களா?
- அதாவது நீங்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும் என அதில் இருக்கிறதா?
- அல்லது நீங்கள் உத்தரவிடுவதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று, மறுமை நாள் வரை எம்மீது கடமையான ஏதேனும் உடன்படிக்கையை நீங்கள் பெற்றுள்ளீர்களா?
- அவர்களுள் அதற்குப் பொறுப்பாளர் யார் என்று நீர் அவர்களிடம் கேட்பீராக.
- அல்லது (இறைவனுக்கு) இணையானவர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? அவர்கள் உண்மையாளர்களாயின், அவர்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்.
- உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில், சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள்.
- அவர்களின் கண்கள் கீழ்நோக்கியவாறு இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொண்டிருக்கும். அவர்கள் நலமாக இருந்த போது, சிரம்பணிந்து வணங்குவதற்காக உண்மையிலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர். (ஆனால் அவர்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை).
- எனவே நீர் என்னையும், இவ்வசனத்தை பொய்யாக்குபவர்களையும் விட்டு விடுவீராக. நாம் அவர்களை, அவர்கள் அறியாத இடத்திலிருந்து படிப்படியாக (அழிவின் பக்கம்) இழுப்போம்.
- நான் அவர்களுக்கு காலக்கெடு வழங்குகின்றேன். (ஏனென்றால்) என் திட்டம் மிக்க வலுவானது.
- நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா? ஆகவே அவர்கள் கடன்சுமையினால் அழுத்தப்படுகின்றனரா?
- மறைவானதைப் பற்றிய ஞானம் அவர்களுக்கு இருக்கிறதா? அதனை அவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
- எனவே நீர் உமது இறைவனின் கட்டளையி(னை நிறைவேற்றுவதி)ல் நிலைத்திருப்பீராக. மீன் (விழுங்கிய) மனிதரைப் போன்று நீர் ஆகி விடாதிருப்பீராக!8 அவர் (தம் இறைவனை) அழைத்த போது, அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார்.
- அவரது இறைவனிடமிருந்து ஓர் அருள் அவரைச் சென்றடையாமல் இருந்திருப்பின், நிச்சயமாக அவர் திறந்த நிலப்பரப்பில் எறியப்பட்டிருப்பார். மேலும் அவர் (தம் மக்களால்) குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.
- ஆனால் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து, நல்லடியார்களைச் சேர்ந்தவராக அவரை ஆக்கினான்.
- நிராகரிப்பவர்கள், நினைவூட்டக் கூடியதை செவியேற்ற போது, (கோபம் நிறைந்த) தங்கள் பார்வைகளால் உம்மை (இறைவனால் உமக்கு வழங்கப்பட்ட பதவியிலிருந்து) விரட்டி விட இருந்தனர். மேலும் அவர்கள், நிச்சயமாக இவர் பைத்தியக்காரர் எனக் கூறுகின்றனர்.
- ஆனால் (குர்ஆனாகிய) இது எல்லா உலகங்களுக்கும் நினைவூட்டக் கூடியதேயாகும்9.