அதிகாரம்: அத்தூர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 50
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நான் மலையைச்1 சான்றாக எடுத்துக் காட்டுகிறேன்.
- எழுதப் பெற்ற (இந்த) வேதத்தினையும்2,
- (அதாவது) திறந்து வைக்கப்பட்டிருக்கும் தாள்களில்3, (எழுதப்பட்டுள்ள நூல்).
- அடிக்கடி செல்லும் (க அபா) ஆலயத்தினையும்4,
- உயர்த்தப்பட்டிருக்கும் கூரையையும்5,
- பொங்கி எழுகின்ற கடலையும்6 (சான்றுகளாகக் காட்டிக் கூறுகிறோம்),
- நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.
- அதனைத் தடுப்பவன் எவனும் இல்லை.
- அந்நாளில் மேகம் அளவு மீறி அலைமோதும்7.
- மலைகள், மலைக்க வைக்கும் அளவுக்கு நகர்ந்து விடும்8.
- எனவே பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்.
- அவர்கள் வீண் பேச்சில் விளையாடுகின்றனர்.
- அந்நாளில் அவர்கள் நரகநெருப்பின்பால் தள்ளப்பட்டவாறு கொண்டு செல்லப்படுவர்.
- நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்த நெருப்பு இது தான்; (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
- இது மாயவித்தையோ அல்லது (இன்னும்) நீங்கள் பார்ப்பதில்லையா?
- நீங்கள் இதில் நுழையுங்கள்; நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அல்லது பொறுத்துக் கொள்ளாமலிருங்கள். இரண்டும் உங்களுக்கு ஒன்றே. நீங்கள் செய்தவற்றிற்குத் தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.(என்றும் அவர்களிடம் கூறப்படும்).
- நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் தோட்டங்களிலும், பேரின்பத்திலும் இருப்பார்கள்.
- அவர்களின் இறைவன் அவர்களுக்கு வழங்குவதைக் கொண்டு அவர்கள் மகிழ்வர். அவர்களின் இறைவன் அவர்களை நரகத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவான்.
- நீங்கள் செய்து வந்த (நற்) செயல்களுக்காக மிக்க மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், குடியுங்கள் (என்று அவன் கூறுவான்).
- அணி அணியாக வைக்கப்பட்டிருக்கும் மஞ்சங்களில் (தலையணைகளில்) சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். கருந்தடங் கண்களைக் கொண்ட கன்னிகளை நாம் அவர்களுக்குத் துணைவர்களாக வழங்குவோம்.
- எவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுடன் அவர்களின் சந்ததிகளையும் (மிக உயர்வான) சுவர்க்கத்தில் நாம் ஒன்று சேர்ப்போம். அவர்களது செயல்(களுக்குரிய கூலி)களுள் எதனையும் நாம் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததற்கு ஈடாக இருக்கின்றான்.
- அவர்களின் விருப்பத்திற்கேற்ப, (பலவகையான) பழத்தையும், இறைச்சியையும் நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
- அவர்கள் அங்கு ஒரு குவளையைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். அங்கு வீண் பேச்சோ, பாவம் செய்தலோ எதுவும் இருக்காது9.
- அங்கு அவர்களுக்காக இளைஞர்கள் ஊழியம் செய்யக் காத்திருப்பார்கள். அவர்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்றவர்களாக விளங்குவார்கள்.
- அவர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தங்களுக்குள் விசாரித்துக் கொண்டிருப்பர்.
- அவர்கள் கூறுவர்: இதற்கு முன்னர் நாம், நம் குடும்பத்தினருக்கிடையே (இருந்த போது, நமது விதியை குறித்துக்) கவலைக்குள்ளாகியிருந்தோம்.
- ஆனால் அல்லாஹ் நம்மீது அருள் செய்து, அனல் காற்றின் தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விட்டான்.
- நாம் இதற்கு முன்னர் அவனிடம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் மிகுந்த நன்மை செய்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு1
- எனவே நீர் (மக்களுக்கு) அறிவுரை கூறிக் கொண்டிருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவரோ; பைத்தியக்காரரோ அல்ல.
- அவர் ஒரு கவிஞர்; காலம் அவருக்குக் கொண்டு வரப் போகின்ற பேராபத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனரா?
- நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நீர் கூறுவீராக.
- இது குறித்து அவர்களது அறிவு(ம், விவேகமும்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றதா? அல்லது அவர்கள் குழப்பவாதிகளான மக்களா?
- அல்லது அவர் இதனை இட்டுக்கட்டிக் கூறியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று; மாறாக அவர்கள் (இறையறிவிப்பின் மீது) அறவே நம்பிக்கை கொள்வதில்லை.
- அவர்கள் உண்மை கூறுபவர்களாயின், இதற்கு நிகரான ஓர் வசனத்தை அவர்கள் கொண்டு வரட்டும்.
- அவர்கள் வெறுமையிலிருந்து படைக்கப்பட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத் தாமே படைத்தவர்களா?
- அவர்கள் வானங்களையும், பூமியையும் படைத்துள்ளனரா? அவ்வாறன்று; மாறாக அவர்கள் (வானங்களையும்,பூமியையும் படைத்தவன் மீது) அறவே நம்பிக்கை கொள்வதில்லை.
- அவர்களிடம் உமது இறைவனின் கருவூலங்கள் உள்ளனவா? அல்லது அவர்கள் (அவற்றின்) பாதுகாவலர்களா?
- அவர்களுக்கு ஒரு ஏணி இருந்து, அதன்மூலம் (வானத்திற்கு ஏறி, இறைச் செய்திகளை) ஒட்டுக் கேட்கின்றனரா? அவ்வாறாயின் அவர்களுள் கேட்பவர் தெளிவான சான்றைக் கொண்டு வரட்டும்.
- அவனுக்குப் பெண் பிள்ளைகளும், உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
- அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா? ஆகவே அவர்கள் கட(ன் சுமையி)னால் அழுத்தப்படுகின்றனரா?
- மறைவானது (பற்றிய ஞானம்) அவர்களுக்கு இருக்கின்றதா? இதனால் அவர்கள் (அவ்வாறு) எழுதுகின்றனரா?
- அவர்கள் (உமக்கு மாற்றமாக) ஏதாவது சதி செய்ய விரும்புகின்றனரா? ஆனால் நிராகரிப்பாளர்கள் தாம் அந்தச் சதியால் பிடிக்கப்படுவார்கள்.
- அல்லாஹ் அல்லாத வேறொரு கடவுள் அவர்களுக்கு உண்டா? (நினைவில் கொள்ளுங்கள்). அவர்கள் (அவனுக்கு) வைக்கின்ற இணையிலிருந்து அல்லாஹ் தூயவனாவான்.
- வானத்தின் ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டால், அது அடர்த்தியான ஒரு மேகம் தான் எனக் கூறுகின்றனர்.
- அவர்கள் தங்களுக்குரிய நாளைச் சந்திக்கும் வரை நீர் அவர்களை விட்டு விடுவீராக; அந்த நாளில் அவர்கள் இடியினால் தாக்கப்படுவர்.
- அந்நாளில் அவர்களின் சதித்திட்டம் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. மேலும் அவர்களுக்கு உதவி செய்யப்படவும் மாட்டாது.
- நிச்சயமாக அநீதி இழைப்பவர்களுக்கு அதனைத் தவிர மற்றொரு தண்டனையும் உண்டு. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- நீர் உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையுடன் எதிர்பார்ப்பீராக. ஏனென்றால் நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன்னால் (எமது பாதுகாப்பில்) இருக்கின்றீர். நீர் (தொழுகைக்காக) எழும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைப்பீராக.
- இரவு நேரத்திலும், விண்மீன்கள் மறையும் போதும் (அதாவது இரவு முடியும் தருவாயிலும்) நீர் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு2