அதிகாரம்: அல்கமர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 56
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (அரேபியாவின் அழிவிற்குரிய) அந்த நேரம் நெருங்கி விட்டது; சந்திரன் பிளந்து விட்டது1.
- அவர்கள் ஓர் அடையாளத்தைக் கண்டால், புறக்கணித்து விட்டு, இது தொடர்ந்து நடந்து வரும் ஒரு மாய வித்தையேயாகும் என்பர்2.
- அவர்கள் (தூதரைப்) பொய்யாக்கித் தங்களுடைய சொந்த விருப்பங்களைப் பின்பற்றுகின்றனர். ஆனால் நிச்சயமாக (இறைவனது) ஒவ்வொரு கட்டளையும் நிகழ்ந்தே தீரும்.
- கடுமையான எச்சரிக்கையைக் கொண்ட முன்னறிவிப்புகள் பற்றி ஏற்கனவே அவர்களிடம் கூறப்பட்டது.
- (மேலும் அவை) முழுமையான ஞானத்தையும் கொண்டிருந்தன. ஆனால் அந்த எச்சரிக்கைகள் (அவர்களுக்கு) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.
- எனவே நீர் அவர்களை விட்டு விலகி விடுவீராக. வெறுப்பூட்டும் ஒன்றன்பால் (தண்டனையின் பக்கம்) அழைப்பவர் அவர்களை அழைக்கும் நாளில்,
- அவர்களது கண்கள் கீழ்நோக்கியவாறு இருக்கும். அவர்கள் சிதறிக் கிடக்கும் வெட்டுக் கிளிகள் போன்று (தங்கள்) கல்லறைகளிலிருந்து3 வெளியேறி,
- அழைப்பவரை நோக்கி விரைந்தோடுவர். இது கடினமான நாள் என்று நிராகரிப்போர் கூறுவர்.
- இவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினர் (தூதரைப்) பொய்யாக்கினர். அவர்கள் எமது அடியாரைப் பொய்யாக்கி, (இவர்) ஒரு பைத்தியக்காரர் (நம் கடவுளரால்) வெறுத்துத் தள்ளப்பட்ட ஒருவர் என்றனர்.
- எனவே அவர் 'நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன்; எனவே, நீ (எனக்கு) உதவி செய்(ய வரு) வாயாக' என்று தம் இறைவனை வேண்டினார்.
- இதன் காரணமாக நாம் வேகமாகக் கொட்டும் தண்ணீரைக் கொண்டு வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
- நாம் பூமியின் நீரூற்றுக்களையும் பாய்ந்தோடச் செய்தோம். எனவே (இரு வகை) தண்ணீரும் முடிவெடுக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைந்தது.
- நாம் அவரை மரப்பலகைகளையும், ஆணிகளையும் கொண்ட ஒன்றில் (கப்பலில்) எடுத்துச் சென்றோம்.
- மறுக்கப்பட்டவருக்குக் கூலியாக, அது எமது கண்களுக்கு முன்னால் (எமது பார்வையில்) மிதந்து சென்றது.
- நாம் அதனை (பின்னர் வரும் சமுதாயங்களுக்கு) ஓர் அடையாளமாக விட்டு வைத்தோம்4. எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரும் உண்டா?
- எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன!
- நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா?
- ஆது ( சமுதாயத்தினர் தூதரைப்) பொய்யாக்கினர். எனவே எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன.
- முடிவற்ற ஒரு துரதிர்ஷ்டமான நாளில்5 மிக வேகமான புயல் காற்றை அவர்களுக்கு எதிராக நாம் அனுப்பினோம்.
- அது மக்களைப் பிடுங்கி எறிந்தது; அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரங்களின் மூடுகள் போல் ஆகி விட்டனர்.
- எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன!
- நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? ரு1
- ஸமூது சமுதாயத்தினரும், எச்சரிப்பாளர்களைப் பொய்யாக்கினர்6.
- அவர்கள் கூறினர்: என்ன? நம்மைச் சேர்ந்த ஒரு மனிதனை, ஒரு தனி நபரையா நாம் பின்பற்ற வேண்டும்? அவ்வாறாயின் நிச்சயமாக நாம் வெளிப்படையான வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருப்பவர்களாவோம்.
- நம்முள் அவருக்கு (மட்டும்) தானா நினைவூட்டல் (வஹி) அருளப்பட்டுள்ளது? அவ்வாறன்று; மாறாக, அவர் மிகவும் பெருமையடிக்கும் பொய்யராவார்.
- (நாம் கூறினோம்): மிகவும் பெருமையடிக்கும் பொய்யர் யார் என்று அவர்கள் நாளை தெரிந்து கொள்வார்கள்.
- அவர்களுக்கு ஒரு சோதனையாக பெண் ஒட்டகம் ஒன்றை நாம் அனுப்பவிருக்கின்றோம். எனவே (ஸாலிஹே!) நீர் (அவர்களது முடிவை) எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பீராக.
- அவர்களுக்கிடையே தண்ணீர் பங்கிடப்பட்டுள்ளது; எனவே அருந்துவதற்கென்று ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நேரமும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று நீர் அவர்களுக்குத் தெரிவிப்பீராக.
- ஆனால் அவர்கள் தங்கள் தலைவனை அழைத்தனர். அவன் அதனைப் பிடித்து (அதன்) கால்களைத் துண்டித்து விட்டான்.
- எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானதாக) இருந்தன!
- நாம் அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு தண்டனையைத் தான் அனுப்பினோம். அவர்கள் வேலி அமைப்பவனால் (வெட்டி) வீழ்த்தப்பட்ட, உலர்ந்த மரத்தூள்களைப் போல் ஆகி விட்டனர்.
- நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா?
- லூத்தின் சமுதாயத்தினரும் எச்சரிப்பாளர்களைப் பொய்யாக்கினர்.
- லூத்தின் குடும்பத்தினரைத் தவிர, மற்றவர்களுக்கு கற்கள் நிரம்பிய புயல் காற்றை நாம் அனுப்பினோம். அதிகாலையில் அவ(ருடைய குடும்பத்தின)ர்களை நாம் காப்பாற்றினோம்.
- இது எம்மிடமிருந்து (வந்து)ள்ள ஓர் அருளாக இருந்தது. நன்றி பாராட்டுபவருக்கு நாம் இவ்வாறே கூலியளிக்கின்றோம்.
- நிச்சயமாக அவர் எமது தண்டனையைப் பற்றி அவர்களை எச்சரித்தார். ஆனால் அவர்கள் அந்த எச்சரிக்கைகள் குறித்து ஐயம் கொண்டனர்.
- அவர்கள், அவரது விருந்தினர்களிடமிருந்து அவரைத் திருப்ப நாடினர்7. எனவே நாம் அவர்களது கண்களைத் திரையிட்டு விட்டு, இப்பொழுது எனது தண்டனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் என்றோம்.
- அதிகாலையில் நிலையான தண்டனை அவர்களை வந்தடைந்தது.
- இப்பொழுது எனது தண்டனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் (என்று நாம் கூறினோம்).
- நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையைப் பெறுபவர் எவரேனும் உண்டா? ரு2
- நிச்சயமாக ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரிட(மு)ம் எச்சரிப்பாளர்கள் வந்தனர்.
- ஆனால் அவர்கள் எம் அடையாளங்கள் எல்லாவற்றையும் பொய்யாக்கினர். எனவே நாம் அவர்களை வல்லமையும், அதிகாரமும் உள்ளவன் பிடிப்பது போன்று பிடித்து விட்டோம்.
- உங்களைச் சேர்ந்த நிராகரிப்பவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வேதங்களில் (தண்டனையிலிருந்து) உங்களுக்கு விதிவிலக்கு உள்ளதா?
- நாங்கள் வெற்றி பெறக்கூடிய படையினராக இருக்கின்றோம் என்று அவர்கள் கூறுகின்றனரா?
- அந்தப் படைகள் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் புறமுதுகு காட்டி வெருண்டோடுவர்8.
- அதுமட்டுமன்று; அந்த நேரம், அவர்களு(டைய அழிவு)க்குக் குறிப்பிடப்பட்ட நேரமாகும். மேலும் அந்த நேரம் மிகுந்த பேராபத்தானதும், மிக்க கசப்பானதுமாகும்.
- நிச்சயமாக குற்றவாளிகள் (பகிரங்கமான) வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.
- அவர்கள் முகங்குப்புற நெருப்பிற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (அவர்களிடம்) நீங்கள் நரகத் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (எனக் கூறப்படும்).
- நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (சரியான) அளவில் படைத்துள்ளோம்.
- எமது கட்டளை, கண்மூடிக் கண்திறப்பது போல் (ஒரு நொடியில் நிறைவேற்றப்பட்டு விடும்) ஒன்றாகும்.
- நிச்சயமாக நாம் (இதற்கு முன்னரும்) உங்களைப் போன்றவர்களை அழித்துள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா?
- மேலும் அவர்கள் செய்த ஒவ்வொரு செயலும் ஏடுகளில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளது.
- ஒவ்வொரு சிறிய, பெரிய செயலும் பதிவு செய்யப்பட்டுள்ளது9.
- நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், தோட்டங்களிலும், ஆறுகளிலும் இருப்பர்.
- எல்லாம் வல்ல அரசனிடத்திலுள்ள நிலையான கண்ணியம் மிக்க இருப்பிடத்தில் இருப்பர். ரு3