53- அந்நஜ்மு

அதிகாரம்: அந்நஜ்மு
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 63

பிரிவுகள்: 3

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. (கார்த்திகை) நட்சத்திரத்தை, அது (பொருளளவில்) கீழ் வரும் போது1 சான்றாகக் காட்டுகிறேன். 
  3. உங்கள் தோழர் தவறிழைக்கவில்லை; வழிகேட்டில் செல்லவுமில்லை2. 
  4. அவர் (தமது சொந்த) விருப்பத்தின் படி பேசவுமில்லை. 
  5. இது (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்பெற்ற வஹியேயாகும். 
  6. பேராற்றல்களைக் கொண்ட (இறை)வன் அவருக்கு (இதனை)க் கற்றுக் கொடுத்தான். 
  7. (அவன்) வல்லமையுள்ளவன், எனவே அவன், தானே (அரியணையில்) நிலை கொண்டான். 
  8. (அவன் வஹியறிவித்த போது) அவர் மிகவும் உயரிய அடிவானத்தில் இருந்தார். 
  9. அவர் (இறைவனுக்கு) மிக நெருக்கமாக மேலே சென்றார். பின்னர் அவர் மனித இனத்தை நோக்கி இறங்கினார்3. 
  10. அவர் இரண்டு விற்களுக்குரிய ஒன்றுபட்ட நாணைப் போன்றவராக அல்லது அதை விடவும் மிக நெருக்கமானவராக ஆகி விட்டார்.
  11. பின்னர் அவன், தன் அடியாருக்கு வஹி மூலம் அறிவிக்கவிருந்ததை அறிவித்தான். 
  12. அந்த உள்ளம், தான் கண்டதைக் குறித்துப் பொய்யுரைக்கவில்லை. 
  13. அவர் பார்த்தது குறித்து நீங்கள் அவருடன் வாக்குவாதம் செய்கின்றீர்களா? 
  14. நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார். 
  15. மிகத்தொலைவிலுள்ள இலந்தை மரத்திற்குப் பக்கத்தில்3. 
  16. அதன் அருகில் நிலையான தங்குமிடமாகிய தோட்டம் உள்ளது. 
  17. மூடக்கூடிய ஒன்று4அ இலந்தை மரத்தை மூடிய போது (அது நிகழ்ந்தது). 
  18. அவரது கண் விலகி விடவுமில்லை; (அது) கடந்து விடவுமில்லை5. 
  19. நிச்சயமாக அவர் தமது இறைவனின் அடையாளங்களுள் மிகவும் மகிமை வாய்ந்ததையே கண்டார். 
  20. இப்பொழுது நீங்கள் லாத்தைப் பற்றியும், உஸ்ஸாவைப் பற்றியும் எனக்குத் தெரிவியுங்கள். (அவைகளுடையதும் இதே நிலைமை தானா?)
  21. மூன்றாவதாக மற்றொரு மனாத் (எனும் பெண் கடவுளைப்) பற்றியும் (எனக்குத் தெரிவியுங்கள்). 
  22. என்ன! உங்களுக்கு ஆண் பிள்ளைகளும், அவனுக்குப் பெண் பிள்ளைகளுமா? 
  23. உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும். 
  24. இவை நீங்களும், உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயாகும். இவற்றிற்காக அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லை. அவர்கள் யூகத்தையும், தங்கள் உள்ளங்கள் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். அவர்களிடம், அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது. (அவ்வாறிருந்தும் அவர்கள் புரியமாட்டார்கள்). 
  25. மனிதனுக்கு அவன் விரும்புவது கிடைத்து விடுகின்றதா? 
  26. முடிவும், ஆரம்பமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். ரு1 
  27. வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். என்றாலும், தன் விருப்பத்திற்கும், தன் திருப்திக்கும் உரியவருக்காக, அல்லாஹ் அனுமதி வழங்கியதன் பின்னரே அன்றி, அவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிப்பதில்லை. 
  28. மறுமையில் நம்பிக்கை கொள்ளாதவர்கள், வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர். 
  29. ஆனால் அதனைப் பற்றிய எந்த அறிவும் அவர்களுக்கு இல்லை. யூகத்தைத் தான் அவர்கள் பின்பற்றுகின்றனர். யூகம் உண்மைக்கு எதிரில் எந்தப் பயனையும் அளிப்பதில்லை. 
  30. நம்மை நினைவு கூர்வதிலிருந்து6 விலகி, இவ்வுலக வாழ்வை மட்டும் விரும்புபவனை நீர் புறக்கணித்து விடுவீராக.
  31. அதுவே அவர்களது அறிவின் எல்லை. நிச்சயமாக உமது இறைவனின் வழியிலிருந்து விலகிச் செல்பவனை அவன் நன்கு அறிகின்றான், நேர்வழியினைப் பின்பற்றுபவனையும் அவன் நன்கு அறிகின்றான். 
  32. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். இதன்விளைவாக அவன் தீமை செய்தவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி கொடுக்கின்றான். நன்மை செய்தவர்களுக்கு மிகச்சிறந்த வெகுமதி வழங்குகின்றான். 
  33. (அதாவது) மிகச் சிறிய குற்றங்களைத் தவிர பெரும் பாவங்களிலிருந்தும், தீய நடத்தைகளிலிருந்தும் விலகிக் கொள்பவர்கள், (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவனாவான். அவன் உங்களைப் பூமியிலிருந்து படைத்த நேரத்திலிருந்தும், நீங்கள் உங்கள் தாய்களின் வயிற்றில் மறைவாக இருந்த நேரத்திலிருந்தும் அவன் உங்களை நன்கு அறிகின்றான். எனவே நீங்களே உங்களைத் தூயவர்களென்று கூறிக் கொள்ளாதீர்கள். (உண்மையான) இறையச்சமுடையவர்களை அவன் நன்கு அறிகின்றான். ரு2 
  34. (உமக்குக் கிடைத்த இறைவெளிப்பாட்டிலிருந்து) விலகி விட்டவனை நீர் அறிவீரா? 
  35. அவன் (இறைவழியில்) சிறிது வழங்கிப் பின்னர் கருமித்தனம் காட்டுகிறான். 
  36. மறைவான விஷயத்தின் ஞானம் அவனுக்கு இருந்து, அதனால் (தன் முடிவை அவன்) பார்க்கிறானா? 
  37. மூஸாவின் வேதத்திலுள்ளது குறித்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? 
  38. (இறை கட்டளையை) நிறைவேற்றிய இப்ராஹீமைக் குறித்தும் (அறிவிக்கப்படவில்லையா?) 
  39. அதாவது சுமை சுமப்பவன் மற்றொருவரின் சுமையைச் சுமக்க மாட்டான்7. 
  40. மேலும் மனிதன் எதற்காக முயற்சி செய்கிறானோ அதுவே அவனுக்குக் கிடைக்கிறது.
  41. மேலும் அவருடைய முயற்சி விரைவில் ஏற்றுக் கொள்ளப்படும். 
  42. பின்னர் அவருக்கு முழுமையான நற்பலன் வழங்கப்படும். 
  43. மேலும் எல்லாம் உமது இறைவனிடமே முடிவடைகிறது. 
  44. மேலும் (மனிதர்களை) சிரிக்க வைப்பவனும், (அவர்களை) அழ வைப்பவனும் அவனே. 
  45. மேலும், மரணமடையச் செய்பவனும், உயிரளிப்பவனும் அவனே. 
  46. மேலும் ஆண், பெண்ணாகிய இணைகளைப் படைத்தவன் அவனே.
  47. (தாயின் கர்ப்பப் பையில்) செலுத்தப்படும் ஒரு துளி விந்திலிருந்து (அவன் படைத்தான்). 
  48. மேலும் மறுமுறை படைப்பதும் அவனது பொறுப்பேயாகும். 
  49. மேலும் (ஒருவனுக்கு) மனநிறைவு பெறச் செய்பவனும், செல்வம் வழங்குபவனும் அவனே. 
  50. மேலும் ஷிஃரா8 என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் அவனே.
  51. மேலும் அவனே முதல் ஆதுவி(ன் சமுதாயத்தி) னரை அழித்தான். 
  52. மேலும் ஸமூதி(ன் சமுதாயத்தி)னரையும் (அழித்தான். அவர்களுள் எவரையும்) விட்டு வைக்கவில்லை. 
  53. மேலும் இவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினரையும் (அவன் அழித்தான்). அவர்கள் மிக்க அநீதியிழைப்பவர்களாகவும், குழப்பவாதிகளாகவும் இருந்தனர். 
  54. அவன் (லூத்து சமுதாயத்தினரது) கவிழ்க்கப்பட்ட நகரங்களைத் தலைகீழாக்கினான். 
  55. பின்னர் மூடவிருந்தது, (இறை ஆக்கினை) அவர்களை மூடி விட்டது. 
  56. எனவே (மனிதனே!) உனது இறைவனின் அருள்களுள் எதனைப் பற்றி நீ சந்தேகப்படுகின்றாய்? 
  57. (எம்முடைய தூதராகிய) இவர், முற்காலத்திலுள்ள எச்சரிக்கை செய்தவர்(களைப் போன்றவர்)களுள் ஓர் எச்சரிக்கையாளராவார். 
  58. (இந்தச் சமுதாயத்தின் தீர்ப்புக்குரிய) நேரம் நெருங்கி விட்டது. 
  59. அல்லாஹ்வைத் தவிர வேறெவராலும் அதனைத் தடுத்து விட இயலாது. 
  60. இச்செய்தி குறித்து நீங்கள் வியப்படைகின்றீர்களா?
  61. நீங்கள் சிரிக்கின்றீர்கள்; அழ மாட்டீர்களா? 
  62. நீங்கள் மிகுந்த கர்வங் கொண்டவர்களாகவே இருக்கின்றீர்கள். 
  63. (எனவே எழுங்கள்;) அல்லாஹ்வின் முன் சிரந்தாழ்த்தி (அவனை) வணங்குங்கள். ரு3
Powered by Blogger.