அதிகாரம்:
அஸ்ஸுக்ருஃப்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 90
பிரிவுகள்: 7
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- ஹா-மீம்- மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன் (ஆகிய இறைவனிடமிருந்து இவ்வதிகாரம் இறங்கியுள்ளது).
- தன் கருத்தை மிகத்தெளிவாக விளக்குகின்ற இவ்வேதத்தின் மேல் ஆணையாக (அதாவது நாம் இதனைச் சான்றாக காட்டுகிறோம்.)
- நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வதற்காக, நாம் இதனைத் தெளிவான அரபு மொழியில் இறக்கினோம்.
- மேலும் நிச்சயமாக இ(அந்தக் குர்ஆனான)து அனைத்து வழிகாட்டலின் ஊற்றிலிருந்து தோன்றியதாகும். எம்மிடத்துப் பார்வையில் இது மேன்மைக்குரியதும், நுட்ப ஞானத்தால் நிரம்பியதுமாகும்.
- நீங்கள் வரம்பு மீறிய சமுதாயத்தினராக இருப்பதனால், நாம் (உங்களை) விட்டு விட்டு, நினைவூட்டக் கூடியதை (குர்ஆனை) உங்களிடமிருந்து அகற்றி விடுவோமா?
- முற்காலத்துச் சமுதாயங்களுக்கிடையே எத்தனையோ நபிமார்களை நாம் அனுப்பியுள்ளோம்.
- அவர்களிடம் எந்த நபி வந்தாலும், அவரைக் குறித்து அவர்கள் ஏளனமே செய்து கொண்டிருந்தனர்.
- பிடிப்பாற்றலில் இவர்களை விட மிகவும் வல்லவர்களை நாம் அழித்து விட்டோம். முற்காலத்து மக்களின் (இத்தகைய ) உதாரணம் ஏற்கனவே சென்று விட்டது.
- வானங்களையும், பூமியையும் படைத்தவன் எவன் என்று நீர் அவர்களிடம் கேட்டால், வல்லமையுள்ளவனும், நன்கு அறிபவனுமாகிய இறைவன் அவற்றைப் படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவர்.
- அவனே உங்களுக்காகப் பூமியைத் தொட்டிலாக ஆக்கி, அதில் நீங்கள் நேரான வழியைப் பின்பற்ற அதில் உங்களுக்குப் பல வழிகளையும் அமைத்துள்ளான்.
- மேலும் அவனே மேகங்களிலிருந்து சரியான அளவில் நீரை இறக்கி, (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம் அதன் மூலம் உயிரற்ற பூமியை உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (உயிர்ப்பிக்கப்பட்டு) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
- மேலும் அவனே எல்லா வகையான இணைகளையும் படைத்துள்ளான். மேலும் அவன் உங்களுக்காக நீங்கள் பயணம் செய்கின்ற கப்பல்களையும், கால்நடைகளையும் படைத்துள்ளான்.
- நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது உறுதியாக அமர்வதற்காகவும், பின்னர் நீங்கள் அவற்றின் மீது உறுதியாக அமரும் போது, உங்கள் இறைவனின் அருளை நீங்கள் நினைவு கூர்ந்து (இவ்வாறு) கூறுவீர்களாக: நாமாகவே இவற்றை அடக்கிப் பயனடைய இயலாதவர்களாக இருந்தும், இவற்றை நமக்குத் தொண்டாற்ற செய்தவன் தூயவன்.
- மேலும் நிச்சயமாக நாங்கள், எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்களாவோம் (என்றும் கூறுவீர்களாக).
- ஆனால் அவர்கள், அவனுடைய அடியார்களுள் சிலரை அவனுக்குச் சந்ததிகளாக ஆக்கியுள்ளனர். நிச்சயமாக மனிதன் பகிரங்கமாக நன்றி கொன்றவனாக இருக்கின்றான். ரு1
- அவன் படைத்ததிலிருந்து பெண் மக்களை அவன் எடுத்துக் கொண்டு, ஆண் மக்களைக் கொண்டு உங்களைச் சிறப்பித்துள்ளானா?
- இருப்பினும், அவர்களுள் ஒருவனுக்கு அவன் அளவற்ற அருளாளனுக்குச் சாட்டிக் கூறுவது போன்ற ஒன்றை (அதாவது பெண் மக்களைக்) குறித்து நற்செய்தி தெரிவித்தால், அவன் முகம் கறுத்து, மிகுந்த கோபமடைகின்றான்.
- ஆபரணங்களுக்கிடையே வளர்க்கப்பட்டு, (விவாகம் செய்வதில் தன் கருத்தைத்) தெளிவாக எடுத்துரைக்க இயலாத ஒன்றையா (நீங்கள் இறைவனுக்கென்று ஒதுக்குகின்றீர்கள்?).
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ)னின் அடியார்களாக விளங்கும் வானவர்களை அவர்கள் பெண்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அவர்களின் படைப்பை இவர்கள் கண்டனரா? எனின் இவர்களது சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கும் (மறுமை நாளில் இது குறித்து) இவர்களிடம் கேள்வி, கணக்குக் கேட்கப்படும்.
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் விரும்பியிருந்தால், நாங்கள் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதனைப் பற்றிய அறிவு எதுவும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீண் கற்பனைகள் செய்கின்றனர்.
- நாம் இதற்கு (குர்ஆனுக்கு) முன்னர் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து, இதற்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கிறார்களா?
- அவ்வாறன்று; மாறாக அவர்கள், நாங்கள் எங்கள் மூதாதையர்களை ஒரு (குறிப்பிட்ட) வழியைப் பின்பற்றக் கண்டோம்; நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கின்றோம் என்று கூறுகின்றனர்.
- இவ்வாறே (நபியே!) உமக்கு முன்னர் நாம் எந்த ஊருக்கும், எந்த எச்சரிக்கையாளரை அனுப்பினாலும், அதன் செல்வந்தர்கள், நாங்கள் எங்கள் மூதாதையர்களை (குறிப்பிட்ட) ஒரு வழியைப் பின்பற்றக் கண்டோம். (எனவே) நாங்களும் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறாமல் இருந்ததில்லை.
- (என்ன!) நீங்கள் உங்கள் மூதாதையர்கள் பின்பற்றக் கண்டதை விட, மிகச்சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?(நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்) என்று (எச்சரிக்கையாளர்) கூறினார். இதற்கு அவர்கள், நீங்கள் எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் மறுக்கிறோம் என்று கூறினர்.
- இதனால் நாம் அவர்களிடம் சரியான முறையில் பழி வாங்கினோம். எனவே (தூதர்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் பார்ப்பீராக. ரு2
- இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும் இவ்வாறு கூறிய போது (நிகழ்ந்ததை நினைத்துப் பாருங்கள்). நீங்கள் வணங்குபவற்றை விட்டு நான் முற்றிலும் விலகுகிறேன்.
- ஆனால், என்னைப் படைத்தவனைத் தவிர, நிச்சயமாக அவன் எனக்கு வழிகாட்டுவான்.
- அவரது (இப்ராஹீமின்) வழித் தோன்றல்கள் (இறைவனிடம்) திரும்புவதற்காக அவன் (இறைவன்) அதனை அவர்களுக்கிடையே நிலைத்திருக்கக்கூடிய ஒரு வாக்காக ஆக்கினான்.
- ஆயினும் உண்மையும், (தூதைத்) தெளிவாக விளக்கக்கூடிய தூதரும் இவர்களிடம் வரும் வரை, நான் இவர்களையும், இவர்களின் மூதாதையர்களையும் (தற்காலிகமான) இன்பம் நுகரும் படி விட்டு வைத்தேன்.
- ஆனால், அவர்களிடம் உண்மை வந்த போது, இது மாயவித்தையாகும்; நாங்கள் இதனை மறுக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
- மேலும், இந்தக் குர்ஆன் இரண்டு நகரங்களிலுள்ள ஒரு பெரிய மனிதருக்கு ஏன் இறக்கப்படவில்லை? என்றும் அவர்கள் கூறினர்1.
- அவர்கள் (அந்தப் பெரிய மனிதர்கள்) தாம் உமது இறைவனின் கருணையைப் பகிர்ந்தளிக்கின்றனரா? நாமே இவ்வுலக வாழ்வில் அவர்களது வாழ்விற்குத் தேவையானவற்றை, அவர்களுக்கிடையே பகிர்ந்து கொடுக்கின்றோம். மேலும் அவர்களுள் சிலரை, மற்றுஞ்சிலரை விடப் பதவிகளில் உயர்த்துகின்றோம். இதன் விளைவாக அவர்களுள் சிலர், சிலரை அடிமைத்தனத்திற்குத் தாழ்த்துகின்றனர். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் கருணையே சிறந்தது.
- மக்கள் எல்லோரும் ஒரே இனத்தவராகிவிடும் நிலைமை இல்லாமலிருந்திருப்பின் அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னை மறுப்பவர்களுடைய வீடுகளின் கூரைகளையும், அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் வெள்ளியினால் ஆனவையாக ஆக்கியிருப்போம்.
- மேலும், அவர்களது வீடுகளின் கதவுகளையும், அவர்கள் சாய்ந்து கொள்ளும் மஞ்சங்களையும் (வெள்ளியினால் ஆனவையாக ஆக்கியிருப்போம்).
- (ஏன், அவற்றையெல்லாம்) தங்கத்தாலேயே ஆக்கியிருப்போம். ஆனால் , இவையாவும் இவ்வுலக வாழ்விற்குரிய தற்காலிகமான பொருட்களேயாகும். உமது இறைவனின் விதிக்கேற்ப மறுமை(யின் சுகம்) இறையச்சமுடையவர்களுக்கே சொந்தமானதாகும். ரு3
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னை நினைப்பதைப் புறக்கணித்து விடுபவனுக்கென்று ஒரு ஷைத்தானை நாம் ஒதுக்கிக் கொடுத்து விடுகின்றோம். இவன், அவனுடைய கூட்டாளியாக எப்போதும் இருப்பான்.
- மேலும் நிச்சயமாக அவர்கள் (ஷைத்தான்கள்) இறைவனது வழியிலிருந்து அவர்களை தடுக்கின்றனர். இவ்வாறிருந்தும், தாங்கள் நேர்வழி காட்டப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
- இறுதியில், அத்தகைய ஒருவன் எம்மிடம் வரும் போது, அவன் (தன் கூட்டாளியிடம், பூமியில்) நானும், நீயும் நேரெதிர் முகடுகளில் இருந்திருக்க வேண்டுமே என்று கூறுகின்றான். எனவே, (ஷைத்தானாகிய) அவன் மிகத் தீய கூட்டாளியாவான்.(என்பது அவனது சாட்சியினாலேயே நிரூபணமாகி விட்டது).
- நீங்கள் அநீதியிழைத்துக் கொண்டிருந்ததனால், இன்று நீங்கள் தண்டனையில் கூட்டாளிகளாகியிருப்பது உங்களுக்கு (உங்கள் வேதனையைக் குறைக்க) எந்தப் பயனையும் அளிக்காது.
- செவிடனைக் கேட்குமாறு செய்ய உம்மால் இயலுமா? அல்லது குருடனுக்கோ, தெளிவான வழிகேட்டில் இருப்பவனுக்கோ உம்மால் வழிகாட்ட இயலுமா?
- நாம் உம்மை (உலகிலிருந்து) எடுத்துக் கொண்டால் (மரணிக்கச் செய்தால்) அவர்களிடம் சரியான முறையில் பழி வாங்குவோம்.
- அல்லது, நாம் அவர்களுக்கு வாக்களித்திருப்பதை நாம் உமக்கு காட்டுவோம்2 . ஏனெனில் நிச்சயமாக நாம் அவர்கள் மேல் முழுமையான ஆற்றலைப் பெற்றவனாக இருக்கின்றோம்.
- உமக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதை நீர் உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நீர் நேரான வழியில் இருக்கின்றீர்.
- நிச்சயமாக இது உமக்கும், உமது சமுதாயத்தினருக்கும் ஒரு நினைவூட்டலேயாகும். கண்டிப்பாக நீங்கள் கேள்வி, கணக்குக் கேட்கப்படுவீர்கள்.
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னையன்றி வணங்கப்படும் வேறெந்தக் கடவுளரையும் நாம் ஏற்படுத்தியுள்ளோமோ என்று உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எம் தூதர்களிடம் நீர் கேட்பீராக3. ரு4
- நிச்சயமாக நாம் மூஸாவை எம் அடையாளங்களுடன் ஃபிர்அவ்னிடமும், அவனது தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர், (அவர்களிடம்) நிச்சயமாக நான் எல்லா உலகங்களுக்கும் இறைவனாக விளங்குபவனின் தூதராக வந்திருக்கிறேன் என்று கூறினார்.
- ஆனால் அவர், எம் அடையாளங்களை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள் அவற்றைக் குறித்து நகைத்துக் கொண்டனர்.
- நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வொரு அடையாளமும், தனக்கு முன்னுள்ள அடையாளத்தை விடப் பெரிதாகவே இருந்தது. அவர்கள் (எம்மிடம்) திரும்புவதற்காக நாம் அவர்களைத் தண்டனையைக் கொண்டு பிடித்தோம்.
- மேலும் அவர்கள் கூறினர்: மாயவித்தைக்காரரே! உமது இறைவன் உம்மிடம் செய்த உடன்படிக்கைக்கேற்ப நீர் எங்களுக்காக அவனை வேண்டுவீராக. (அவன் இத் தண்டனையை எங்களை விட்டுத் தடுத்து விட்டால்) நிச்சயமாக நாங்கள் நேர்வழியினைப் பின்பற்றுவோம்.
- ஆனால் நாம் அவர்களை விட்டுத் தண்டனையை அகற்றியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டனர்.
- ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தினருக்கு அறிவிப்பு விடுத்து, என் சமுதாயத்தினரே! எகிப்தின் ஆட்சியும், எனக்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிகளும் எனக்குரியவை இல்லையா? நீங்கள் பார்ப்பதில்லையா? என்று பறை சாற்றினான்.
- இழிந்தவராகவும், தெளிவாகப் பேச முடியாதவராகவும் இருக்கின்ற இவரை விட நான் சிறந்தவனா? (அல்லது இவர் சிறந்தவரா?)
- (இவர் சிறந்தவர் என்றால்) இவருக்குப் பொற்காப்புகள் ஏன் வழங்கப்படவில்லை? அல்லது (அவரது பாதுகாப்பிற்காக) அவரைச் சுற்றிலும் திரண்டிருக்கும் வானவர்கள் அவருடன் ஏன் வரவில்லை?
- இவ்வாறு அவன் தன் சமுதாயத்தினரை ஏமாற்றி விட்டான். அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து விட்டனர். நிச்சயமாக அவர்கள் தீய சமுதாயத்தினராக இருந்தனர்.
- பின்னர் அவர்கள் எமக்குக் கோபத்தை உண்டாக்கிய போது, நாம் அவர்களிடம் பழி வாங்கி, அவர்கள் எல்லோரையும் மூழ்கடித்து விட்டோம்.
- நாம் அவர்களை பின்னர் தோன்றும் தலைமுறையினருக்கு ஒரு முன் நிகழ்ச்சியாகவும், ஓர் எடுத்துக்காட்டாகவும் ஆக்கினோம்.
- மர்யத்தின் மகன் ஓர் உவமையாக எடுத்துரைக்கப்படும்போது, உமது சமுதாயத்தினர் அதனைக் குறித்துக் கூச்சலிடத் தொடங்குகின்றனர்.
- எங்கள் கடவுளர் சிறந்தவர்களா? அல்லது அவர் சிறந்தவரா என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் உம்மிடம் விவாதம் செய்வதற்காகவே இதனைக் கூறுகின்றனர். உண்மையிலேயே அவர்கள் சண்டையிடும் சமுதாயத்தினராவர்.
- அவர் எம்முடைய அடியாராகவே விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து, அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக்கினோம்.
- நாம் விரும்பியிருந்தால், உங்களிலிருந்தும் சிலரைப் பூமியில் உங்கள் இடத்தில் (வாழ்ந்து வரும்) வானவர்களாக ஆக்கியிருப்போம்.
- ஆனால் நிச்சயமாக அவர், அந்த நேரத்தின் ஓர் அடையாளமாக இருக்கிறார். எனவே நீங்கள் அதுகுறித்து ஐயப்பாடு கொள்ளாதீர்கள். மாறாக என்னைப் பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும்.
- (உண்மையிலிருந்து விலகியிருப்பவனாகிய) ஷைத்தான் உங்களை (நேரான பாதையிலிருந்து) தடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்.
- ஈஸா தெளிவான சான்றுகளுடன் வந்த போது கூறினார்: நிச்சயமாக நான் நுட்பமான ஞானத்துடனும், நீங்கள் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகளுள் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும் உங்களிடம் வந்துள்ளேன். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்.
- நிச்சயமாக என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்வே. எனவே நீங்கள் அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்.
- ஆனால் (அவருக்கெதிரான) கூட்டத்தினர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டனர். எனவே அநீதியிழைத்தவர்களுக்கு, வேதனையளிக்கக்கூடிய நாளின் தண்டனை மூலம் அழிவு விதிக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் அறிந்து கொள்ளாமலிருக்கும் வேளையில் அவர்களிடம் திடீரென்று வரும் அந்த நேரத்தையல்லவா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இறையச்சமுடையவர்களைத் தவிர, ஏனைய நண்பர்கள் அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவராகி விடுவர்.
- (அவர்களிடம் இறைவன் கூறுவான்) என் அடியார்களே! இன்று உங்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; நீங்கள் கவலையடையவுமாட்டீர்கள்;
- இத்தகையோர் எம் வசனங்களிடத்து நம்பிக்கை கொண்டு, கீழ்ப்படிந்து நடப்பவர்களாக விளங்கினர்.
- நீங்களும், உங்கள் மனைவியர்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாய் சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று இறைவன் அவர்களிடம் கூறுவான்).
- பொன்னாலான தட்டுகளும், குவளைகளும் மீண்டும்,மீண்டும் அவர்களிடம் கொண்டு வரப்படும். உள்ளங்கள் விரும்புபவையும், கண்களுக்கு இனியவையும், அ(த் தோட்டத்)தில் உள்ளன. நீங்கள் அதில் என்றென்றும் வாழ்ந்து வருவீர்கள்.
- மேலும் நீங்கள் செய்த செயல்களின் பலனாக நீங்கள் வாரிசாக்கப்பட்டுள்ள சுவர்க்கம் இதுவே.
- அதில் உங்களுக்காக மிகுதியான பழங்கள் உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
- நிச்சயமாக குற்றவாளிகள் நரகத் தண்டனையில் நீண்ட காலம் தங்கியிருப்பர்.
- அது, அவர்களுக்கு எளிதாக்கப்படமாட்டாது. அவர்கள் அதில் நம்பிக்கையிழந்தவர்களாகி விடுவார்கள்.
- நாம் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை; மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்து வந்தனர்.
- மேலும் அவர்கள் (இவ்வாறு) கூச்சலிடுவார்கள்: (நரகத்தின்) அதிகாரியே! உமது இறைவன் எங்களுக்கு மரணத்தைத் தர வேண்டும். (அதற்கு அவர்) நீங்கள் (இங்கு) நீண்டகாலம் தங்கியிருப்பீர்கள் என்று கூறுவார்.
- நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். ஆனால் உங்களுள் பெரும்பாலார் உண்மையை வெறுப்பவர்களாக இருந்தீர்கள் (என்று இறைவன் கூறுவான்).
- அவர்கள் (அல்லாஹ்வின் தூதரைத்) தாக்கத் தீர்மானித்துள்ளனரா? அவ்வாறாயின், நாமும் தீர்மானித்துள்ளோம்4.
- அவர்களது இரகசியங்களையும், சதித்திட்டங்களையும் நாம் கேட்பதில்லை என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறன்று; மாறாக எம் தூதர்கள் அவர்களுடனிருந்து (எல்லாவற்றையும்) பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னுக்கு ஒரு மகன் இருந்தால், அவரை வணங்குபவர்களுள் நான் முதன்மையானவனாக இருந்திருப்பேன் என்று நீர் கூறுவீராக5.
- வானங்கள், பூமி ஆகியவற்றிற்கு இறைவனாகவும், அரியணைக்கு இறைவனாகவும் விளங்குபவன், அவர்கள் கற்பிக்கின்ற (இணைகள் எல்லா)வற்றை விட்டும் தூயவனாவான்.
- எனவே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களது நாளை, அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீண் பேச்சிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருக்குமாறு நீர் அவர்களைத் தனியே விட்டு விடுவீராக.
- அவனே வானங்களிலும் வணக்கத்திற்குரியவன்; பூமியிலும் வணக்கத்திற்குரியவன். அவன் மிக நுட்பமான ஞானமுள்ளவனும், நன்கு அறிபவனுமாவான்.
- வானங்கள், பூமி மற்றும் இவ்விரண்டிற்குமிடையிலுள்ளவை ஆகியவற்றின் ஆட்சிக்குரியவன் மிகவும் அருளுக்குரியவனாவான். அந்த (மறுமை) நேரத்தைப் பற்றிய ஞானம் அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- அவர்கள், அவனையன்றி எவரை அழைக்கின்றனரோ அவர்கள் பரிந்து பேசுவதற்குத் தகுதியுடையவர்கள் அல்ல. ஆனால் உண்மைக்குச் சாட்சி பகர்பவரே பரிந்து பேசுவதற்கு உரிமை பெற்றுள்ளார்6. (இந்த உண்மையினை) அவர்கள் அறிவார்கள்.
- அவர்களைப் படைத்தவன் எவன் என்று நீர் அவர்களிடம் வினவினால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் என்பார்கள். இருப்பினும் அவர்கள் எங்கே திருப்பிவிடப்படுகின்றனர்?
- என் இறைவா! இவர்கள் நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்தினராக இருக்கின்றனர் என்ற இ(த் தூது)வரது கூற்றின் மேல் ஆணையாக!
- நீர் அவர்களை மன்னித்து, சாந்தி உண்டாவதாக என்று கூறுவீராக! இதனால் அவர்கள் (உண்மையினை) விரைவில் அறிந்து கொள்வர். (என்று நாம் பதிலளித்தோம்). ரு7