அதிகாரம்: நூஹ்
அருளப்பெற்ற இடம்:
மக்கா. | வசனங்கள்: 29
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- உமது சமுதாயத்தினரிடம் வேதனையளிக்கக் கூடிய தண்டனை வருவதற்கு முன்னர், நீர் அவர்களை எச்சரிப்பீராக என்று கூறி நாம் நூஹை அவரது சமுதாயத்தினரிடம் அனுப்பினோம்.
- அவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! நிச்சயமாக நான் மிகத்தெளிவான எச்சரிக்கையாளனாக உங்களிடம் வந்துள்ளேன்.
- அதாவது நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று நான் உங்களிடம் கூறுகின்றேன்.)
- உங்கள் பாவங்களை அவன் உங்களுக்கு மன்னிப்பான். மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குக் காலக்கெடு வழங்குவான்; நீங்கள் அறிந்திருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வால் குறிப்பிட்ட காலம் வந்து விடும் போது அது பிற்படுத்தப்படவே மாட்டாது.
- (பின்னர்) அவர் கூறினார்: என் இறைவா ! நான் என் சமுதாயத்தினரை இரவு, பகலாக அழைத்தேன்.
- ஆனால் எனது அழைப்பு, அவர்களை மேலும் அதிகமாக (என்னை விட்டு) ஓடவே செய்துள்ளது.
- நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம், அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் புகுத்தி, தங்கள் ஆடைகளால் தங்களை மறைத்துக் கொண்டு1, (தங்கள் பாவச்செயல்களில்) பிடிவாதங் கொண்டு மிக வன்மையாகப் பெருமை பாராட்டினார்கள்.
- (இதற்குப்) பின்னர் நான் அவர்களை வெளிப்படையாக அழைத்தேன்.
- இதற்குப் பிறகு நான் அவர்களுக்குப் பகிரங்கமான அறிக்கையினை வெளியிட்டேன்; இரகசியமாகவும் அவர்களிடம் பேசினேன்.
- மேலும் நான் அவர்களிடம் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். அவன் மிக அதிகமாக மன்னிப்பவனாவான்.
- (நீங்கள் மன்னிப்புக் கோரினால்) அவன் உங்களுக்காக மிக அதிகமாக மழையை இறக்குவான்.
- மேலும் செல்வங்களையும், குழந்தைகளையும் கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்வான்; உங்களுக்காகத் தோட்டங்களை முளைக்கச் செய்து, உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
- நீங்கள் அல்லாஹ்வுக்கு உண்மையான மதிப்பு ஏன் வழங்குவதில்லை?
- அவன் உங்களைப் பல நிலைகளில் படைத்துள்ளான்.
- அவன் ஏழு வானங்களையும் எவ்வாறு ஒன்றுக்கொன்று ஒத்து இருக்கும் முறையில் படைத்துள்ளான் என்பதனை நீர் காணவில்லையா?
- அவன் சந்திரனை அவற்றில் ஒளியாக அமைத்து, சூரியனை ஒரு விளக்காகவும் ஆக்கியுள்ளான்2.
- அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து நல்ல வளர்ச்சியாக வளரச் செய்துள்ளான்.
- பின்னர் அவன் உங்களை அதிலேயே திரும்பி விடச் செய்வான். பின்னர் உங்களை (அதிலிருந்தே) அவன் வெளியே கொண்டு வருவான்.
- பூமியை அல்லாஹ் உங்களுக்காக மிகப் பரந்ததாக ஆக்கியுள்ளான்.
- அதில் திறந்த வழியில் நீங்கள் செல்வதற்காகவே(அவ்வாறு ஆக்கினான்). ரு1
- நூஹ் கூறினார்: என் இறைவா! அவர்கள் எனக்கு மாறு செய்தனர். மேலும் எவனது செல்வமும் சந்ததிகளும், அவனது அழிவையே அதிகரித்துள்ளதோ அவனைப் பின்பற்றியுள்ளனர்.
- மேலும் (எனக்கெதிராக) அவர்கள் மாபெரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
- அவர்கள் (ஒருவருக்கொருவர்) நீங்கள் உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்; (உங்கள் கடவுள்களாகிய) வத்தையோ, ஸுவாவையோ, யகூஸையோ, யவூகையோ, நஸ்ரையோ விட்டு விடாதீர்கள் என்று கூறுகின்றனர்3.
- அவர்கள் அதிகமானவர்களை வழி தவறச் செய்து விட்டனர். எனவே, நீ, அநீதியிழைப்பவர்களுக்கு வழிகேட்டையே அதிகரிப்பாயாக.
- அவர்கள் தங்கள் பாவங்களின் காரணமாக மூழ்கடிக்கப்பட்டனர். மேலும் நெருப்பில் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.
- மேலும் நூஹ் கூறினார்: என் இறைவா! பூமியில் நிராகரிப்பவர்களின் எந்த வீட்டையும் நீ விட்டு வைக்காதிருப்பாயாக4.
- ஏனென்றால், நீ அவர்களை விட்டு வைத்தால், உனது மற்ற அடியார்களையும் அவர்கள் வழிதவறச் செய்து விடுவார்கள். மேலும் அவர்கள் நிராகரிக்கும் பாவியைத் தான் பெற்றெடுப்பார்கள்5.
- என் இறைவா! என்னையும், என் பெற்றோரையும், என் வீட்டில்6 நம்பிக்கை கொண்டவராக நுழைபவரையும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக; அநீதியிழைப்பவர்களுக்கு அழிவையே அதிகரிப்பாயாக. ரு2