அதிகாரம்: அல்ஜின்னு
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 29
பிரிவுகள்: 6
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நீர் கூறுவீராக! ஜின்களுள் ஒரு குழுவினர் (உம்மிடமிருந்து குர்ஆனைக்) கவனமாகக் கேட்டனர் என்று இறையறிவிப்பின் வாயிலாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது1; அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் வியப்பிற்குரிய ஒரு குர்ஆனைச் செவியேற்றோம்.
- அது நேர்வழியின்பால் வழி நடத்துகிறது; எனவே நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக ஆக்க மாட்டோம்.
- உண்மையிலேயே எங்கள் இறைவனின் மகிமை மிகவும் உயர்ந்ததாகும். அவன் தனக்காக மனைவியையோ, மகனையோ எடுத்துக் கொள்ளவில்லை2.
- மேலும் உண்மையிலேயே நம்மில் அறிவற்றவர்கள் அல்லாஹ்வைக் குறித்து தகாத, மாபெரும் பொய்களைக் கூறி வருகின்றனர்.
- மேலும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வைக் குறித்து அறவே பொய்யுரைக்க மாட்டார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
- மேலும் உண்மையிலேயே பொதுமக்களுள் சில மக்கள் ஜின்களுள் சில மக்களிடம் பாதுகாப்புக் கோரிக் கொண்டிருந்தனர்; (இவ்வாறு செய்த) அவர்கள் இவர்களுக்கு, இவர்களின் தற்பெருமையினை மேலும் அதிகமாக்கி விட்டனர்.
- மேலும் அல்லாஹ் ஒருபோதும் எவரையும் (நபியாக) அனுப்ப மாட்டான் என்று நீங்கள் நம்புவது போல அவர்களும் நம்பி வந்தனர்3.
- மேலும் நாங்கள் வானத்தைத் தொட்டோம்4. ஆனால் அது வலிமை வாய்ந்த காவலர்களாலும், கொழுந்து விட்டெரியும் நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
- நாங்கள் செவியேற்பதற்காக அதன் இருப்பிடங்களுள் சிலவற்றில் அமர்ந்திருந்தோம். ஆனால் இப்பொழுது எவர் செவியேற்கின்றாரோ அவர், கொழுந்து விட்டெரியும் ஒரு நட்சத்திரம், தன்னைத் தாக்குவதற்கான பதுங்குமிடத்தில் காத்திருப்பதைக் காண்கின்றார்5.
- பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீங்கு நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களின் இறைவன் அவர்களை நேரா(னவர்களா)க ஆக்க திட்டமிட்டுள்ளானா என்பதை நாம் அறியமாட்டோம்.
- நம்முள் சிலர் நல்லவர்களாகவும், மற்றுஞ்சிலர் அதற்கு மாற்றமானவர்களாகவும் உள்ளனர். நாம் மாறுபட்ட பல வழிகளைப் பின்பற்றினோம்.
- பூமியில் அல்லாஹ்வின் திட்டத்தினை நம்மால் முறியடிக்கவும் இயலாது. ஓடிச் சென்று அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் இயலாது என்பதை நாம் அறிவோம்.
- நேர்வழியி(ற்கான அழைப்பி)னை நாங்கள் செவியேற்ற போது, அதில் நம்பிக்கை கொண்டோம். தமது இறைவனிடம் நம்பிக்கை கொள்பவர், எந்த இழப்பிற்கும் எந்த அநீதிக்கும் அஞ்சுவதில்லை.
- நம்முள் சிலர் (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும், மற்றுஞ்சிலர் அநீதியிழைப்பவர்களாகவும் உள்ளனர். (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களே நேர்வழி தேடுபவர்களாவர்.
- மேலும் அநீதியிழைப்பவர்களோ நரகத்தின் எரிபொருள்களாவர்.
- அவர்கள் (நேரான) வழியில் நிலைத்திருந்தால், நிச்சயமாக நாம் தண்ணீரை அவர்களுக்கு அருந்துவதற்காக தாராளமாக வழங்கியிருப்போம்.
- அதன்மூலம் நாம் அவர்களைச் சோதிப்பதற்காகவே (அவ்வாறு செய்வோம்.) எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றானோ அவனை, அடக்கி விடக்கூடிய கடினமான தண்டனையில் அவன் தள்ளுவான்.
- வணங்குமிடங்கள் (எல்லாம்) அல்லாஹ்விற்கே உரியவையாகும். எனவே நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறெவரையும் அழைக்காதீர்கள்.
- அல்லாஹ்வின் அடியார் (ஆகிய முஹம்மத் நபி) அவனை வேண்டிக் கொண்டு நிற்கும் போது, அநேகமாக அவர்கள் அவரைத் திணறடிக்கும் வகையில் அவர் மேல் விழுகின்றனர். ரு1
- நீர் கூறுவீராக: நான் எனது இறைவனிடம் மட்டுமே வேண்டுகின்றேன். அவனுக்கு எவரையும் நான் இணையாக ஆக்குவதில்லை.
- உங்களுக்குத் தீங்கோ, நன்மையோ செய்ய எனக்கு வலிமையில்லை என்றும் கூறுவீராக.
- (மேலும்) நீர் கூறுவீராக: நிச்சயமாக, அல்லாஹ்வுக்கெதிராக என்னை எவராலும் காப்பாற்ற இயலாது. நிச்சயமாக அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காணவும் இல்லை.
- (எனது பொறுப்பு) அல்லாஹ்விடமிருந்து (வரும்) வெளிப்பாட்டையும், அவனது தூதுச்செய்திகளையும் எடுத்துரைப்பதேயாகும். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்ப்படியாதவர்களுக்காக நரக நெருப்பு உள்ளது. அவர்கள் அதில் நீண்ட நெடுங்காலம் இருப்பார்கள்.
- ஆம்; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (தண்டனையான) அதனை அவர்கள் காணும் போது உதவியாளர்களைப் பொருத்த வரை மிகவும் பலவீனமானவர் யார்? , மேலும் எண்ணிக்கையைப் பொருத்த வரை மிகக் குறைவானவர் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்6.
- உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் நெருங்கி விட்டதா அல்லது என் இறைவன் அதற்கு நீண்டதொரு காலக்கெடுவை நியமித்துள்ளானா என்பதை நான் அறியேன் என்று நீர் கூறுவீராக.
- அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.
- அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர7; பின்னர் அவன் (பாதுகாப்பளிக்கும் வானவர்களின்) காவற்படை ஒன்றினை அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் செல்லுமாறு செய்கிறான்.
- (இறைத்தூதர்களாகிய) அவர்கள், தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை (மக்களுக்கு) த் தெரிவித்து விட்டனரா என்பதை அவன் அறிவதற்காக (அவ்வாறு செய்கின்றான்). அவர்களிடமுள்ளவற்றை (எல்லாம்) அவன் சூழ்ந்து கொண்டு, எல்லாவற்றையும் அவன் கணித்து வைத்துள்ளான். ரு2