73- அல் முஸ்ஸம்மில்


அதிகாரம்: அல்முஸ்ஸம்மில்
அருளப்பெற்ற இடம்: மக்கா. | வசனங்கள் :21
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (மாபெரும் பொறுப்பால்) போர்த்தப்பட்டவரே!
  3. நீர் இரவில், ஒரு சிறுபகுதி நீங்கலாக (தொழுகையில்) நிற்பீராக.
  4. அதில் பாதி(நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக.
  5. அல்லது அதில் சிறிது அதிகப்படுத்திக் கொள்வீராக. குர்ஆனைக் கவனத்துடன் மெதுவாக ஓதுவீராக1.
  6. நிச்சயமாக நாம் மிகவும் அழுத்தமான சொல்லுடன் பொறுப்பை உம்மிடம் ஒப்படைக்கின்றோம்.
  7. நிச்சயமாக, இரவில் எழுந்திருப்பது (மனயிச்சையை) அடக்குவதற்கு மிகவும் வலிமை வாய்ந்ததும், (பிரார்த்தனைக்குரிய) வார்த்தைகள் தொடர்பாக மிகவும் நற்பயனளிக்கக் கூடியதுமாகும்.
  8. நிச்சயமாக, உமக்குப் பகல் பொழுதில் மிக அதிகமான பணிகள் உள்ளன2.
  9. எனவே, நீர் உமது இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து, அவனிடமே முழுமையாக (உம்மைப்) பணிவுடன் ஒப்படைத்து விடுவீராக.
  10. அவன் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன். அவனையன்றி வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை. எனவே, நீர் அவனை(உமது) பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
  11. (உமது எதிரிகளாகிய) அவர்கள் கூறுவதையெல்லாம் நீர் பொறுத்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகியிருப்பீராக.
  12. சுகபோகத்தை பெற்றுள்ள, (உண்மையை ஏற்க) மறுப்பவர்களுடன் நீர் என்னைத் தனியாக விட்டு விட்டு, அவர்களுக்குச் சிறிது காலக்கெடு வழங்குவீராக.
  13. நிச்சயமாக, எம்மிடம் (கனமான) விலங்குகளும், சுடர்விட்டெரியும் நெருப்பும் உள்ளன.
  14. தொண்டையை அடைக்கக்கூடிய உணவும், வேதனையளிக்கக்கூடிய தண்டனையும் (உள்ளன).
  15. (தண்டனை வரும்) அந்நாளில் பூமியும், மலைகளும் ஆட்டங்காணும். மேலும் மலைகள் நொறுங்கிய மணல் மேடுகள் போன்றாகிவிடும்.
  16. நாம் ஃபிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்று, நிச்சயமாக நாம் உங்களுக்குச் சாட்சியாக இருக்கக் கூடிய ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம்.
  17. ஆனால், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். எனவே நாம் அவனை ஒரு பயங்கரமான தண்டனையைக் கொண்டு பிடித்தோம்.
  18. எனவே, நீங்கள் நிராகரித்தீர்களென்றால், குழந்தைகளை முதுமையடையச் செய்யக் கூடிய ஒரு நாளிற்கெதிராக நீங்கள் உங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வீர்கள்?
  19. அந்நாளில் வானம் ஒரு பக்கமாக வீழ்ந்து விடும். இது நிறைவேறக்கூடிய அவனது வாக்குறுதியாகும்.
  20. நிச்சயமாக, இது நினைவூட்டக்கூடிய ஒன்றாகும். எனவே எவர் விரும்புவாரோ அவர் தமது இறைவனிடம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
  21. நீர் இரவில் சற்றேறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி நேரமோ, (சில வேளைகளில்) அதில் ஒரு பாதி நேரமோ, மூன்றில் ஒரு பகுதி நேரமோ (தொழுது கொண்டு) நிற்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிகின்றான்; அவ்வாறே உம்முடனுள்ள ஒரு கூட்டத்தினரும், அல்லாஹ் இரவு, பகல் ஆகியவற்றின் அளவைத் தீர்மானிக்கின்றான். அத(ன் அளவி)னை உங்களால் கணிக்க இயலாது என்பதனை அவன் அறிகின்றான். எனவே அவன் உங்களுக்கு அருள் செய்துள்ளான். ஆகவே (உங்களுக்கு) எளிதாக இருக்கும் அளவிற்கு, நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். உங்களுள் சிலர் நோயாளிகளாகவும், மற்றுஞ்சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் பயணம் செய்பவர்களாகவும், இன்னுஞ்சிலர் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அவன் அறிகின்றான். எனவே அதிலிருந்து (உங்களுக்கு) எளிதான அளவுக்கு ஓதுங்கள்; தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஸக்காத்துக் கொடுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுங்கள்; நீங்கள் உங்களுக்காக எந்த நன்மையினை முன்னால் அனுப்பினாலும், அதனை நீங்கள் அல்லாஹ்விடம் காண்பீர்கள். அது மிகச்சிறந்ததாகவும், மகத்தான வெகுமதியை அளிக்க வல்லதாகவும் இருக்கும். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு2
Powered by Blogger.