74- அல் முத்தஸிர்


அதிகாரம்: அல்முத்தஸிர்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 57
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. மேலங்கி அணிந்திருப்பவரே!
  3. எழுந்து, எச்சரிக்கை விடுப்பீராக.
  4. மேலும் உமது இறைவனை மேன்மைப்படுத்துவீராக.
  5. உம்மைச் சூழ்ந்திருப்பவர்களைத் தூய்மைப்படுத்துவீராக.
  6. இறைவனுக்கு இணைவைத்தலை அழித்து விடுவீராக.
  7. மிகுதியாக (திரும்பக்) கிடைக்குமென்ற எண்ணத்துடன், உதவி செய்யாதிருப்பீராக.
  8. உமது இறைவனுக்காகப் பொறுமையை மேற்கொள்வீராக.
  9. எக்காளத்தில் ஒலி எழுப்பப்படும் போது,
  10. அந்த நாள் ஒரு கடினமான நாளாக இருக்கும்.
  11. நிராகரிப்பவர்களுக்கு அது எளிதானதாக இருக்காது1.
  12. என்னையும், நான் படைத்தவரையும் தனியாக விட்டு விடுவீராக.
  13. நான் அவருக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தேன்.
  14. எப்பொழுதும் அவரைச் சுற்றியிருக்கும் ஆண் மக்களையும் (வழங்கினேன்).
  15. நான் அவருக்குத் தேவையானவற்றைத் தாராளமாக வழங்கினேன்.
  16. ஆயினும், நான் (அவருக்கு) மேலும் அதிகமாகக் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகின்றார்.
  17. கவனமாகக் கேளுங்கள்! அவர் எமது அடையாளங்களுக்குப் பகைவராக இருந்தார்.
  18. எனவே வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுந் தண்டனையை விரைவில் நான் அவருக்குக் கொடுப்பேன்.
  19. அவர் (நம் வசனங்களை) சிந்தித்தார். மேலும் கணித்தார்.
  20. அவர் அழிவிற்குள்ளாக! அவர் எவ்வாறு (தவறாகக்) கணித்தார்!
  21. மீண்டும் அவர் அழிவிற்குள்ளாக! அவர் எவ்வாறு (தவறாகக்) கணித்தார்!
  22. பின்னர் அவர் சிந்தித்தார்.
  23. பின்னர் அவர் முகம் சுளித்து, வெறுப்புடன் பார்த்தார்.
  24. பின்னர் அவர் புறக்கணித்துப் பெருமையடித்தார்.
  25. அடுத்து அவர் கூறினார்: இது மரபுரிமை வழியாக ஒப்புவிக்கப்பட்ட மந்திர வித்தையேயாகும்.
  26. இது மனிதனுடைய சொல்லேயாகும்.
  27. விரைவில் நான் அவரை "ஸகரில்" நுழையச் செய்வேன்.
  28. ஸகர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா?
  29. (நரகமாகிய) அது எதனையும் எஞ்சியிருக்கச் செய்வதுமில்லை; அது எதனையும் விட்டு வைப்பதுமில்லை.
  30. அது தோலை எரித்து விடுகின்றது.
  31. அதன்மீது பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர்.
  32. நாம் நரகத்தின் காவலர்களாக வானவர்களையே நியமித்துள்ளோம். இவர்களின் எண்ணிக்கையை நிராகரிப்பவர்களுக்கு ஒரு சோதனையாகவே நாம் ஏற்படுத்தியுள்ளோம். இதன்விளைவாக, வேதம் வழங்கப்பெற்றவர்கள் உறுதி கொள்வர்; நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை அதிகமாகும். வேதம் வழங்கப் பெற்றவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும் ஐயம் கொள்ள மாட்டார்கள். இதனைக் கூறுவதனால் அல்லாஹ் கருதுவது என்னவென்று தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பவர்களும் கூறுவர். இவ்வாறாக அல்லாஹ், தான் விரும்புபவரை வழி தவறியவர் என்று தீர்மானிக்கின்றான்; தான் விரும்புபவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உமது இறைவனின் படைகளை அவனையன்றி வேறெவரும் அறிவதில்லை. இது மனிதனுக்கு நினைவூட்டக்கூடியதேயாகும்!
  33. கவனமாகக் கேளுங்கள்! சந்திரன் மேல் ஆணையாக,
  34. இரவு பின்வாங்கும் போது, அதன் மேல் ஆணையாக,
  35. விடியற்காலை ஒளி வீசும் போது, அதன் மேலும் ஆணையாக.
  36. நிச்சயமாக அது மாபெரும் பேராபத்துகளுள் ஒன்றும்,
  37. மனிதனுக்கு எச்சரிக்கை விடுக்கக்கூடியதுமாகும்.
  38. உங்களுள் (நன்மையில்) முன்னேற அல்லது பின்வாங்க விரும்புவோருக்கு,
  39. ஒவ்வோர் ஆன்மாவும் தான் சம்பாதித்திருப்பதற்காக அடகு வைக்கப்பட்டதாகும்.
  40. வலப்பக்கத்தவர்களைத் தவிர.
  41. இவர்கள் சுவர்க்கங்களில் இருப்பார்கள். அவர்கள் விசாரிப்பார்கள்.
  42. குற்றவாளிகளிடம்:
  43. உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்திருப்பது எது?
  44. அவர்கள் கூறுவர்: நாங்கள் தொழுகைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கவில்லை.
  45. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
  46. வீண் பேச்சில் ஈடுபட்டிருந்தவர்களுடன் நாங்களும் வீண் பேச்சில் ஈடுபட்டிருந்தோம்.
  47. தீர்ப்பு நாளை நாங்கள் மறுத்துக் கொண்டிருந்தோம்.
  48. மரணம் எங்களைப் பற்றிக் கொள்ளும் வரை.
  49. எனவே பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுங்குப் பயனளிக்காது.
  50. அறிவுரையைப் புறக்கணிக்கின்ற அவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது!
  51. அவர்கள் கழுதைகளைப் போன்றவராவர்
  52. சிங்கத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்ற
  53. உண்மையிலேயே அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னிடம் திறந்த நூல்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றான்.
  54. அது ஒருபோதும் நடக்காது. உண்மையிலேயே அவர்கள் மறுமைக்கு அஞ்சுவதில்லை.
  55. கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும்.
  56. எனவே விரும்புபவர் இதனை நினைவில் கொள்ளட்டும்.
  57. அல்லாஹ் (அவ்வாறு) விரும்பினாலன்றி அவர்கள் நினைவில் கொள்ள மாட்டார்கள். அஞ்சத் தகுந்தவனும், மன்னிக்கக் கூடியவனும் அவனேயாகும். ரு2
Powered by Blogger.