75- அல் கியாமத்


அதிகாரம்: அல்கியாமத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 41
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (அவர்கள் நினைப்பது போல்) அல்ல. நான் உயிர் பெற்றெழும் (மறுமை)  நாளைச் சான்றாகக் காட்டுகிறேன்.
  3. சுயமாகப் பெறப்படுகின்ற திறமையை நான் சான்றாகக் காட்டுகிறேன்.
  4. மனிதன் நினைக்கின்றானா நாம் அவனது எலும்புகளை ஒன்று சேர்க்க மாட்டோம் என்று?
  5. ஆம்! அவனுடைய ஒவ்வொரு விரல் நுனிகளையும் மீண்டும் அமைப்பதற்கு நாம் வலிமை பெற்றுள்ளோம்.
  6. ஆனால் மனிதன் தீமையைப் பற்றி முற்றிலும் தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றிச் செல்லவே விரும்புகின்றான்.
  7. எழுப்பப்படும் நாள் எப்போது வரும் என்று அவன் கேட்கின்றான்.
  8. கண்(பார்வை) கூசும் போது,
  9. சந்திரனுக்கு கிரகணம் ஏற்பட்டு,
  10. சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போதும்1,
  11. எங்கு தப்பியோடுவது என்று அந்நாளில் மனிதன் கூறுவான்.
  12. கவனமாகக் கேளுங்கள்! (இன்று தண்டனையிலிருந்து தப்புவதற்கு) எந்தப் புகலிடமும் இல்லை!
  13. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடமுள்ளது.
  14. மனிதன் முன்னால் அனுப்பியதையும், பின்னால் விட்டுச் சென்றதையும் பற்றி அந்நாளில் அவனுக்குத் தெரிவிக்கப்படும்2.
  15. உண்மையிலேயே மனிதன், தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்;
  16. அவன் தனது சாக்குப்போக்குகளை எடுத்துரைத்தாலும் சரியே.
  17. இ(க்குர்ஆனான)து விரைவில் இறங்க நீர் இத்துடன் நாவை அசைக்க வேண்டாம்3.
  18. நிச்சயமாக இதனைத் தொகுப்பதும், இதனை ஓதிக் காட்டுவதும் எமது பொறுப்பாகும்.
  19. எனவே நாம் இதனை ஓதி விட்டால், நீரும் இதனைப் பின் தொடர்ந்து ஓதுவீராக.
  20. பின்னர் அதனை விளக்கிக் கூறுவதும் எமது பொறுப்பேயாகும்.
  21. கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் நிலைத்திராததை விரும்புகின்றீர்கள்.
  22. மறுமையைப் புறக்கணித்து விடுகிறீர்கள்.
  23. அந்நாளில் சில முகங்கள் ஒளிமிகுந்தவையாக இருக்கும்.
  24. (அவை ஆர்வத்துடன்) தங்கள் இறைவனை நோக்கிப் பார்த்தவாறிருக்கும்.
  25. மேலும் சில முகங்கள் அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
  26. ஏனென்றால், முதுகை முறித்து விடும் பெருந்துன்பம் தமக்கு நேரிடவிருக்கிறது என்று அவை நினைக்கும்.
  27. கவனமாகக் கேளுங்கள்! (மரணமடையவிருக்கும் ஒருவனுடைய உயிர்) தொண்டையை வந்தடையும் போதும்,
  28. (அவனைக் காப்பாற்ற) மந்திரிப்பவன் எவன் என்று கூறப்படும் போதும்,
  29. இதுவே பிரிந்து செல்லும் நேரம் என்று அவன் உறுதி கொள்ளும் போதும்,
  30. (மரண வேதனையில்) காலோடு கால் உராயும் போதும்,
  31. அந்நாளில் உமது இறைவனிடமே கொண்டு செல்லப்படும். ரு1
  32. ஏனென்றால் அவன் (உண்மையை) ஒப்புக் கொள்ளவுமில்லை; தொழுகைகளை நிறைவேற்றவுமில்லை.
  33. மாறாக, அவன் (உண்மையை) ஏற்க மறுத்தும், புறக்கணித்தும் விட்டான்.
  34. பின்னர், அவன் கர்வம் கொண்டு பெருமையாகத் தன் குடும்பத்தினரிடம் சென்றான்.
  35. உனக்கு அழிவு தான்! மீண்டும் அழிவு தான்!
  36. மீண்டும் உனக்கு அழிவு தான்! மீண்டும் அழிவு தான்!
  37. (அவன் படைக்கப்பட்டவாறு) தன்னிச்சையாக விட்டு விடப்படுவான் என்று மனிதன் நினைக்கின்றானா?
  38. (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட திரவத்தின் ஒரு துளியாக அவன் இருந்ததில்லையா?
  39. பின்னர் அவன் ஓர் பற்றிப்பிடிக்கும் இரத்தக் கட்டியாக ஆனான். இதன் பிறகு அல்லாஹ் (அவனுக்கு) உருவம் கொடுத்து, (அவனை) முழுமையாக ஆக்கினான்.
  40. பின்னர் அவன், அவனிடமிருந்து ஆண், பெண் இணையை உண்டு பண்ணினான்.
  41. இத்தகைய ஒரு (இறை)வன், மரணமடைந்தவர்களை உயிர் பெற்றெழச் செய்வதற்கு ஆற்றல் பெற்றவன் இல்லையா? ரு2
Powered by Blogger.