அதிகாரம்: அத்தஹ்ர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 32
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- பேசப்படத்தக்க ஒரு பொருளாக மனிதன் இல்லாதிருந்த ஒரு காலக்கட்டம் அவனுக்கு வந்ததில்லையா?
- நாம் மனிதனைச் சோதிப்பதற்காக (ப் பல்வேறு ஆற்றல்களின்) கலவையான ஒரு விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்தோம். நாம் அவனை நன்கு கேட்கின்றவனாகவும், பார்க்கின்றவனாகவும் மாற்றினோம்.
- நாம் அவனுக்கு வழியைக் காட்டியுள்ளோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ அல்லது நன்றி கொன்றவனாகவோ இருக்கட்டும்.
- நிச்சயமாக, நாம் நிராகரிப்பாளர்களுக்காக (இரும்புச்) சங்கிலிகளையும், கழுத்து விலங்குகளையும், சுடர் விட்டெரியும் நெருப்பையும் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளோம்.
- ஆனால் சீரிய பண்புள்ளவர்கள் கற்பூரத்தால் பக்குவப்பட்ட கிண்ணத்திலிருந்து அருந்துவர்.
- அ(ந்தக் கற்பூரமான)து ஒரு நீரூற்றாகும்1. அதிலிருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துகின்றனர். அவர்கள் அதனை மிக வேகமாகப் பாயச் செய்கின்றனர்.
- அவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். மேலும் அவர்கள் தீமை மிகவும் பரவியிருக்கும் ஒரு நாளிற்கு அஞ்சுகின்றனர்.
- அவர்கள் அ(ந்த இறை)வன் மீது கொண்ட அன்பின் காரணமாக ஏழை, அனாதை, கைதி ஆகியவர்களுக்கு உணவளிக்கின்றனர்.
- அல்லாஹ்வின் விருப்பத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கூலியையோ, (நீங்கள்) நன்றி செலுத்துவதையோ நாங்கள் விரும்புவதில்லை (என்றும்,)
- நிச்சயமாக, நாங்கள் எங்கள் இறைவனிடமிருந்து கோபம் நிறைந்த, புருவத்தைச் சுளித்துக் கொண்டிருக்கும் ஒரு நாளிற்கு அஞ்சுகின்றோம் (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
- எனவே அல்லாஹ் அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, அவர்களுக்குப் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்குவான்.
- அவர்கள் (நன்மையில் நிலைத்து நின்று) பொறுமையை மேற்கொண்டதால், அவன் அவர்களுக்குத் தோட்டத்தையும், பட்டாடையையும் பரிசாக வழங்குவான்.
- அவர்கள் அதிலுள்ள மஞ்சங்களில் தலையணைகளில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அதில் கடினமான வெப்பத்தையோ, கடினமான குளிரையோ காண மாட்டார்கள்.
- அதன் நிழல்கள் அவர்களுக்கு மிக மிக நெருங்கியவையாக இருக்கும். அதன் பழக்குலைகள் எளிதில் எட்டக் கூடியவையாக கொண்டு வரப்படும்.
- வெள்ளிப்பாத்திரங்களும், கண்ணாடிக் கோப்பைகளும் அவர்களிடம் மீண்டும், மீண்டும் கொண்டு வரப்படும்.
- கண்ணாடியைப் போன்றிருக்கும் அந்த வெள்ளிக் கோப்பைகளை அவர்கள் முழுத் திறமையினால் உருவாக்கினர்.
- அவர்களுக்கு அதில் இஞ்சியினால் பதப்படுத்தப்பட்ட ஒரு கிண்ணம் அருந்துவதற்குக் கொடுக்கப்படும்.
- அதில் ஸல்ஸபீல் என்னும் பெயர் பெற்ற ஒரு நீரூற்று இருக்கும்2. (அதனை நம்பிக்கையாளர்கள் அருந்துவார்கள்).
- முதுமையடையாத இளைஞர்கள் அவர்களுக்குப் பணி செய்ய எப்பொழுதும் வந்து கொண்டிருப்பார்கள். நீர் அவர்களைக் காணும் போது அவர்கள் சிதறிய முத்துக்கள் என்று நீர் நினைப்பீர்.
- மேலும் நீர் காணும் போது, ஒரு பேரின்பத்தையும், மகத்தான ஆட்சியையும் நீர் அங்குக் காண்பீர்.
- அவர்கள் மீது பச்சை நிறமானதும், சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டதுமான அழகிய பட்டாடைகள் இருக்கும். அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் இறைவன் அவர்களுக்குத் தூய பானத்தை அருந்தக் கொடுப்பான்.
- இது உங்களுக்குரிய நற்பலனாகும். உங்கள் முயற்சிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. (என்று அவர்களிடம் கூறப்படும்). ரு1
- நிச்சயமாக, நாமே இந்தக் குர்ஆனைச் சிறிது சிறிதாக உமக்கு இறக்கியுள்ளோம்.
- எனவே நீர் உமது இறைவனின் தீர்ப்பிற்காகப் பொறுமையுடன் காத்திருப்பீராக; அவர்களுள் பாவியாகவோ, நன்றி கொன்றவனாகவோ இருக்கும் எவனுக்கும் நீர் இணங்கி விட வேண்டாம்.
- நீர் உமது இறைவனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக.
- இரவு வேளையிலும் அவன் முன் சிரம் பணிந்து வணங்கி, இரவில் நீண்ட நேரம் வரை அவனது மகிமையை மிக அதிகமாகப் புகழ்வீராக.
- நிச்சயமாக, இவர்கள் தற்போதைய வாழ்வை விரும்பி, தங்களுக்கு முன்னாலுள்ள கடினமான ஒரு நாளை புறக்கணித்து விடுகின்றனர்.
- நாமே இவர்களைப் படைத்து, இவர்களின் உடலமைப்பை வலிமையுள்ளதாக ஆக்கியுள்ளோம். நாம் விரும்பினால், இவர்களுக்குப் பதிலாக இவர்களைப் போன்ற மற்றவர்களை எம்மால் கொண்டு வர முடியும்.
- நிச்சயமாக, இது (நினைவூட்டக்கூடிய) ஒரு நற்போதனையாகும். எனவே, விரும்புபவர் தமது இறைவனிடம் செல்லும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
- ஆனால் அல்லாஹ் விரும்பினாலன்றி, உங்களால் உங்கள் விருப்பத்தைச் செயல்படுத்த முடியாது. நிச்சயமாக, அல்லாஹ் நன்கு அறிபவனும், நுண்ணறிவுடையவனுமாவான்3.
- தான் விரும்புபவரைத் தன் அருளில் நுழையுமாறு அவன் செய்கின்றான். அநீதியிழைப்பவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையை அவன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். ரு2