77- அல் முர்ஸலாத்

அதிகாரம்: அல்முர்ஸலாத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 51
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. மென்மையாக செய்தி தெரிவிக்கும் தூதுவர்களை (நான்) சான்றாகக் காட்டுகிறேன்.
  3. பின்னர் விரைவாகச் செல்பவர்களைச் சான்றாகக் காட்டுகிறேன்1.
  4. (உண்மையை) மிகச்சிறந்த முறையில் பரப்புபவர்களையும்2,
  5. தெளிவான வேறுபாட்டை எடுத்துக்காட்டுபவர்களையும்3,
  6. அறிவுரையை (வெகுதூரம்) எடுத்துச் செல்பவர்களையும் சான்றாகக் காட்டுகிறேன்.
  7. மன்னிப்பதற்காகவும், எச்சரிப்பதற்காகவும்,
  8. நிச்சயமாக, உங்களிடம் வாக்களிக்கப்பட்டது நிறைவேறியே தீரும்.
  9. நட்சத்திரங்கள் (தம்) ஒளியை இழந்து விடுமாறு செய்யப்படும் போதும்4,
  10. வானம் பிளக்கப்படும் போதும்5,
  11. மலைகள் பறந்து விடுமாறு செய்யப்படும் போதும்6,
  12. எல்லாத் தூதர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தோற்றுவிக்கப்படும் போதும் 7,
  13. (இந்த நிகழ்ச்சிகளுக்குரிய) நேரம் எந்த நாளிற்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  14. தீர்ப்பு நாளிற்காக.
  15. தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று நீர் அறிவீரா?
  16. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவு தான்!
  17. முற்காலச் சமுதாயத்தினர்களை நாம் அழிவிற்குள்ளாக்கவில்லையா?
  18. அவர்களுக்குப் பின் தோன்றிய சமுதாயத்தினர் இப்பொழுது அவர்களைப் பின்தொடருமாறு நாம் செய்வோம்8.
  19. குற்றவாளிகளுடன் நாம் இவ்வாறே நடந்து கொள்கிறோம்9.
  20. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  21. நாம் உங்களை ஓர் அற்பமான திரவத்திலிருந்து படைக்கவில்லையா?
  22. பின்னர் நாம் அதனைப் பாதுகாப்பான ஓரிடத்தில் வைக்கவில்லையா?
  23. அறியப்படும் ஒரு காலக்கட்டம் வரை;
  24. இவ்வாறாக, நாம் ஒரு கால அளவை ஏற்படுத்தியுள்ளோம். நாம் மிகச்சிறந்த முறையில் கால அளவை ஏற்படுத்துபவர்களாவோம்.
  25. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  26. நாம் பூமியை திரட்டி வைத்துக் கொள்ளக் கூடியதாக ஆக்கவில்லையா?10
  27. உயிருள்ளவர்களையும், மரணமடைந்தவர்களையும்.
  28. நாம் அதில் உயரமான மலைகளை அமைத்து, அருந்துவதற்கு இனிமையான நீரை உங்களுக்கு வழங்கினோம்11.
  29. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  30. நீங்கள் பொய்ப்படுத்தியதை நோக்கி இப்பொழுது செல்லுங்கள்; (என்று நாம் அவர்களிடம் கூறுவோம்).
  31. (அதாவது) மூன்று பகுதிகளைக் கொண்ட நிழலை நோக்கிச் செல்லுங்கள்12.
  32. அது நிழலைத் தரக்கூடியதும் அல்ல; தீச்சுடரிலிருந்து பாதுகாப்பும் தருவதில்லை.
  33. அது (மிகப்பெரிய) கோட்டைகளைப் போன்ற தீப்பொறிகளை எறிகின்றது.
  34. அது மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போன்றதாக இருக்கும்.
  35. அந்நாளில், (உண்மையைப் ) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  36. இது அவர்களால் பேச இயலாத நாளாகும்.
  37. அவர்கள் சாக்குப்போக்குக் கூறுவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்13.
  38. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  39. இது தீர்ப்பு (கூறப்படும்) நாளாகும்; நாம் உங்களையும், முற்காலத்து எல்லா(ச் சமுதாயத்தின) ரையும் ஒன்று திரட்டுவோம்.
  40. இப்பொழுது உங்களிடம் ஏதேனும் திட்டம் இருந்தால் அதனை எனக்கு எதிராகப் பயன்படுத்துங்கள்.
  41. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்! ரு1
  42. நிச்சயமாக, இறையச்சமுடையவர்கள் நிழல்களுக்கும், நீரூற்றுகளுக்கும், (இடையே இருப்பார்கள்.)
  43.  அவர்களுக்கு விருப்பமான பழங்களுக்கும் இடையேயும் இருப்பார்கள்.
  44. நீங்கள் செய்த செயல்களுக்குக் கூலியாக இன்பத்துடன் உண்ணுங்கள்; அருந்துங்கள் (என்று அவர்களிடம் கூறப்படும்).
  45. நிச்சயமாக, நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலனளிக்கின்றோம்.
  46. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  47. உண்ணுங்கள்; (இவ்வுலக வாழ்வின்) சிறிது சுகத்தை அனுபவியுங்கள்; நிச்சயமாக, நீங்கள் குற்றவாளிகளாவீர்கள் (என்று நாம் அவர்களிடம் கூறுவோம்).
  48. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  49. குனிந்து வணங்குங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்குவதில்லை.
  50. அந்நாளில், (உண்மையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அழிவுதான்!
  51. எனவே, அவர்கள் இதற்குப் பின்னர் எந்த வார்த்தையில் நம்பிக்கை கொள்வார்கள்? ரு2
Powered by Blogger.