82- அல் இன்பித்தார்


அதிகாரம்: அல் இன்பித்தார்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. வானம் வெடித்து விடும் பொழுது1,
  3. நட்சத்திரங்கள் சிதறி விடும் பொழுது2,
  4. கடல்கள் பிளக்கச் செய்யப்(பட்டு ஒன்று சேர்க்கப்)படும் பொழுது3,
  5. கல்லறைகள் திறந்து வைக்கப்படும் பொழுது4,
  6. அப்போது (பெருங் குற்றவாளியான) ஆன்மா5, தான் முன்னால் அனுப்பியிருப்பதையும், பின்னால் விட்டுச் சென்றதையும் அறிந்து கொள்ளும்6.
  7. மனிதனே, உன் கண்ணியத்திற்குரிய இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?
  8. அ(ந்த இறை)வனே உன்னைப் படைத்தான். பின்னர் முழுமைப்படுத்தினான். பின்னர் தகுந்த ஆற்றலை வழங்கினான்.
  9. அவன் விரும்பிய தோற்றத்தில் உன்னை வடிவமைக்கின்றான்.
  10. (நீங்கள் நினைப்பது போன்று) அன்று, மாறாக (மறுமை நாளில்) தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்கள்.
  11. நிச்சயமாக (இறைவன் புறமிருந்து) உங்கள் மீது கண்காணிப்பவர்கள் உள்ளனர்.
  12. (அவர்கள்) கண்ணியத்திற்குரிய பதிவாளர்கள் (ஆவர்).
  13. நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிகின்றனர்.  
  14. நிச்சயமாக நன்மையில் முன்னேறுபவர் (எப்போதும்) அருள்களில் இருப்பர்.
  15. மேலும் நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில் இருப்பர்;
  16. தீர்ப்பு (வழங்கப்படும்) நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள்;
  17. அவர்களால் அதை விட்டுத் தப்பியோடவே இயலாது.
  18. தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
  19. மீண்டும் (நாம் கூறுகின்றோம்) தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
  20. அந்நாளில் எந்த உயிரும், மற்றெந்த உயிருக்கும் சிறிதளவாவது பயனளிக்க எந்த வலிமையையும் பெற்றிருக்காது. மேலும் அந்நாளில் கட்டளை அல்லாஹ்வுடையதாகவே இருக்கும்8. ரு1
Powered by Blogger.