அதிகாரம்: அல் முத்தஃப்பிபீன்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 37
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- குறைவாக அளந்து கொடுப்பவர்களுக்கு அழிவு தான்:
- அவர்கள் மற்றவர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது, அதனை முழுமையாக வாங்குகின்றனர்:
- ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும் போது குறைவாகக் கொடுக்கின்றனர்.
- அவர்கள் மீண்டும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அத்தகையவர்கள் அறிவதில்லையா?
- அந்த மகத்துவமிக்க நாளி(ன் தீர்ப்பி)ற்காக.
- அந்நாளில் எல்லா மக்களும், எல்லா உலகங்களின் இறைவன் முன் நிற்பார்கள்.
- (அவர்கள் நினைப்பது போன்று) அன்று. நிச்சயமாக தீயவர்களின் குறிப்பு ஸிஜ்ஜீனில்1 உள்ளது.
- ஸிஜ்ஜீன் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
- (அது விரிவாகப்) பதிவு செய்யப்பட்ட ஒரு நூலாகும்.
- பொய்ப்படுத்துபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்;
- தீர்ப்பு நாளைப் பொய்ப்படுத்தும் அவர்களுக்கு (அழிவுதான்).
- வரம்பு மீறிய கொடும்பாவிகளைத் தவிர வேறெவரும் அதனை நிராகரிப்பதில்லை.
- அத்தகையவர்கள் முன் எம் வசனங்கள் ஓதிக் காட்டப்படும் போது, இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்று கூறுகின்றனர்.
- (அவ்வாறு) அன்று, மாறாக, அவர்கள் சம்பாதித்திருப்பது, அவர்களின் உள்ளங்களை துருப்பிடிக்கச் செய்து விட்டது. (அதனாலேயே அவ்வாறு கூறுகின்றனர்).
- அது மட்டுமன்று. நிச்சயமாக அவர்கள் அந்நாளில் தங்கள் இறைவனை(ப் பார்ப்பதை) விட்டுத் தடை செய்யப்படுவார்கள்.
- பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
- பிறகு (அவர்களிடம்) நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தது இது தான் என்று கூறப்படும்.
- (நீங்கள் நினைப்பது போல்) அன்று. நிச்சயமாக நன்மை மிக்கோரின் குறிப்பு இல்லிய்யீனில்2 உள்ளது.
- இல்லிய்யீன் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
- (அது விரிவாகப்) பதிவு செய்யப்பட்ட ஒரு நூலாகும்.
- (இறைவனை) நெருங்கியவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
- நிச்சயமாக நன்மையில் முன்னேறியவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
- அவர்கள் மஞ்சங்களில் அமர்ந்து (எல்லா நிலைமைகளையும்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
- நீர் அவர்களின் முகங்களில் பேரின்பச் செழிப்பைக் காண்பீர்.
- முத்திரையிடப்பட்ட தூய்மையான பானம் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்.
- அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். ஆசை கொள்பவர் இதற்காக ஆசை கொள்ள வேண்டும்.
- அது தஸ்னீமி்3 (நீரி) னால் பதப்படுத்தப்பட்டிருக்கும்;
- அது ஒரு நீரூற்றாகும். (இறைவனுக்கு) நெருங்கியவர்கள் அதிலிருந்து அருந்துவர்.
- நிச்சயமாகக் குற்றவாளிகளாக இருந்தவர்கள், நம்பிக்கை கொண்டிருந்தவர்களைப் பார்த்து (ஏளனமாக)ச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
- அவர்கள், இவர்களைக் கடந்து சென்ற போது, அவர்கள் ஒருவருக்கொருவர் கண்ணால் சைகை செய்தனர்.
- அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்ற போது (நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக) செய்திகளை இட்டுக்கட்டுபவர்களாகவே திரும்பிச் சென்றனர்.
- அவர்கள் இவர்களைக் காணும் போது, நிச்சயமாக இவர்கள் முற்றிலும் வழி தவறியவர்களேயாவர் எனக் கூறுவர்.
- ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லை.
- எனவே இன்று, நம்பிக்கை கொண்டவர்களே நிராகரிப்பவர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
- அவர்கள் மஞ்சங்களில் அமர்ந்து (எல்லா நிலைமைகளையும்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
- நிராகரிப்பவர்களுக்கு, அவர்கள் செய்தவற்றிற்குத் தகுந்த பிரதிபலன் கொடுக்கப்பட்டு விட்டதா?(இல்லையா என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வர்). ரு1