அதிகாரம்: அல் இன்ஷிக்காக்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 26
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வானம் பிளக்கப்படும் போது1.
- தன்னுடைய இறைவனுக்கு (அது) செவி சாய்க்கும் போது2 இதுவே அதன் கடமையாகும்3.
- மேலும் பூமி விரிக்கப்படும் போது4.
- அது தன்னிடமுள்ளதையெல்லாம் எறிந்து விட்டு5 காலியாகி விடும் போது6.
- மேலும் தனது இறைவனுக்குச் செவி சாய்க்கும் போது7, இதுவே (அதற்குக்) கடமையாகும்.
- மனிதனே! நிச்சயமாக நீ உனது இறைவனை நோக்கிக் கடினமாக உழைத்ததன்8 பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
- பின்னர் தமது பதிவேடு தம் வலக்கையில் கொடுக்கப்படுபவரிடம்9
- விரைவில் எளிதான கேள்வி, கணக்குக் கேட்கப்படும்10.
- அவர் தமது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் திரும்புவார்11.
- எவருக்குத் தமது பதிவேடு அவருக்குப் பின்னாலிருந்து கொடுக்கப்படுகிறதோ
- அவர்12, உடனே (தன் வாயாலேயே தமது) அழிவை அழைப்பார்13.
- மேலும் சுடர் விட்டெரியும் நெருப்பில் நுழைவார்14.
- (இதற்கு முன்னர்) அவர் தமது குடும்பத்தினருக்கிடையே பெரு மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தார்15.
- நிச்சயமாக அவர், தாம் ஒருபோதும் (இறைவனிடம்) திரும்பிச் செல்லப் போவது கிடையாது என்று நினைத்தார்.
- ஆம்; நிச்சயமாக அவருடைய இறைவன் அவரை நன்கு பார்த்துக் கொண்டிருந்தான்.
- (அவர்கள் நினைப்பது போல்) அன்று (என்பதற்கு), செவ்வானத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்16.
- இரவையும், அது சூழ்ந்து கொள்பவற்றையும்.
- சந்திரனையும் அது முழுமை பெறும் பொழுதையும்17 (சான்றாகக் காட்டுகிறேன்).
- நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள்.
- எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?
- அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது, அவர்கள் சிரம் தாழ்த்தி வணங்குவதில்லை.
- அதற்கு மாறாக, நிராகரிப்பவர்கள் (அதனைப்) பொய்ப்படுத்துகின்றனர்.
- அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
- எனவே நீர் அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனையைப் பற்றிய செய்தியைக் கூறுவீராக.
- ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களுக்கு முடிவில்லாத வெகுமதி கிடைக்கும். ரு1