அதிகாரம்: அல் புரூஜ்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 23
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- கிரக நிலைகள் கொண்ட வானத்தை நான் சான்றாகக் காட்டுகிறேன்1.
- வாக்களிக்கப்பட்ட நாளையும்2,
- சாட்சி கூறுபவரையும், சாட்சி கூறப்பட்டவரையும்3 (நான் சான்றாகக் காட்டுகிறேன்).
- அகழ்களுக்குரியவர்கள் விபத்தில் அழிக்கப்பட்டனர்4.
- (அதாவது) எரிபொருள் ஊட்டப்பட்டுள்ள நெருப்பிற்குரியவர்கள்5,
- அவர்கள் அதன் அருகில் உட்கார்ந்திருந்த நேரத்தில்6,
- அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்குச் செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்7.
- வல்லவனும், மிகுந்த புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காகவே, அவர்களிடம் அவர்கள் வெறுப்புக் கொண்டனர்8.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியதாகும். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் சாட்சியாவான்9.
- நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்திப் பின்னர் கழிவிரக்கம் கொள்ளாதவர்களுக்கு, நிச்சயமாக நரகத் தண்டனையுமுண்டு; எரிக்கக் கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு.
- ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களுக்கு நிச்சயமாக தோட்டங்கள் உண்டு; அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
- நிச்சயமாக உமது இறைவனின் பிடி கடினமானதாகும்.
- நிச்சயமாக (முதலில்) தோற்றுவிப்பவனும், திரும்பவும் செய்பவனும் அவனே!
- மேலும் அவன் மிக்க மன்னிப்பவனும், மிக்க அன்பு காட்டுபவனுமாவான்.
- மேலும் அவன் அரியணைக்குரியவனும், மிக்க மேன்மைக்குரியவனுமாவான்10.
- தான் நினைப்பதைச் செய்பவன் ஆவான்.
- படைகளின் செய்தி உம்மிடம் வரவில்லையா?
- ஃபிர்அவ்ன், ஸமூது ஆகியவர்களது (படைகளின் செய்தி உம்மிடம் வரவில்லையா?)
- உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் (உண்மையினைப்) பொய்ப்படுத்துவதிலேயே (பிடிவாதமாக) இருக்கின்றனர்.
- ஆனால், அல்லாஹ் அவர்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்கிறான்.
- (அது மட்டுமன்று) உண்மையிலேயே இது மிக்க மேன்மைக்குரிய(தும், எங்கும் எப்பொழுதும் ஓதப்படுவதுமாகிய) குர்ஆனாகும்.
- எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, நன்கு பாதுகாக்கப்பட்ட பலகையில் இது உள்ளது11. ரு1