87- அல் அஃலா


அதிகாரம்: அல் அஃலா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. மிக்க மேன்மைக்குரிய உமது இறைவனுடைய பெயரின் தூய்மையினை எடுத்துரைப்பீராக;
  3. அவனே (மனிதனைப்) படைத்து, முழுமைப்படுத்தினான்1;
  4. மேலும் அவன் (அவனுடைய ஆற்றல்களைக்) கணித்து, (அவற்றிற்கேற்ப அவனுக்கு) நேர்வழி காட்டுகின்றான்;
  5. அவன் மேய்ச்சல் புல்லை வெளிப்படுத்துகின்றான்;
  6. பின்னர் அவன் அதனைக் காய்ந்த, பயனற்ற குப்பையாக ஆக்குகின்றான்.
  7. நாம் உமக்கு(க் குர்ஆனை) க் கற்பிப்போம்; நீர் (அதனை) மறக்க மாட்டீர்2,
  8. அல்லாஹ் விரும்புகின்றவை நீங்கலாக3. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும், மறைந்திருப்பதையும் அறிகின்றான்.
  9. இலகுவானதை(யெல்லாம்) நாம் உமக்கு எளிதாக்கித் தந்திருக்கின்றோம்4.
  10. எனவே நீர் நினைவூட்டிக் கொண்டேயிருப்பீராக5. நினைவூட்டிக் கொண்டிருப்பது நிச்சயமாகப் பயனளிக்கக் கூடியதாகும்.
  11. இறைவனுக்கு அஞ்சுபவர் நிச்சயமாக அறிவுரையை ஏற்றுக் கொள்வார்.
  12. ஆனால் பெரும் பேறிழந்தவன் இதிலிருந்து விலகிக் கொள்வான்6.
  13. அவனே பெரும் நெருப்பில் நுழைபவனாவான்7.
  14. பின்னர் அவன் அதில் சாகவுமாட்டான்; வாழவுமாட்டான்8.
  15. தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்பவன் நிச்சயமாக வெற்றி பெறுகின்றான்.
  16. மேலும் அவன் தனது இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து, தொழுகைகளை நிறைவேற்றியும் வருகின்றான்.
  17. ஆனால் நீங்கள் (மறுமையை விட) இவ்வுலக வாழ்க்கைக்கே முதன்மை கொடுக்கின்றீர்கள்;
  18. அதே வேளையில் மறுமையோ மிகச்சிறந்ததும், என்றும் நிலையானதுமாகும்.
  19. நிச்சயமாக இதுவே முன்னுள்ள வேத நூல்களில் (போதிக்கப்பட்டு) உள்ளது.
  20. (அதாவது) இப்ராஹீம், மூஸா ஆகியவர்களின் வேத நூல்களில்9 (போதிக்கப்பட்டுள்ளது).
Powered by Blogger.