அதிகாரம்: அல் ஃபஜ்ர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 31
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (நான்) விடியற்காலையைச் சான்றாகக் காட்டுகிறேன்1.
- பத்து இரவுகளையும்2,
- இரட்டை(ப் படையை)யும், ஒற்றை(ப் படையை)யும்2அ,
- (மேற்கூறப்பட்ட பத்து இரவுகளுக்குப் பிறகு) சென்று விடுகின்ற இரவையும், (சான்றாகக் காட்டுகிறேன்.)3
- அறிவுடையவருக்கு இதில் உறுதியான சான்று இல்லையா?
- ஆது (இனத்தவரு)டன் உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
- உயர்ந்த கட்டடங்களை உடையவர்களாகிய இரம் எனு(இனத்தவருடனு)ம் (உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
- அவற்றைப் போன்று அந்த நாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
- பள்ளத்தாக்கில் கற்பாறைகளைக் குடைந்து (தங்கள் வீடுகளை) அமைத்த ஸமூது இனத்தவருடனும், (இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பது உமக்குத் தெரியாதா?).
- ஏராளமான பாசறைகளுக்குரிய ஃபிர்அவ்னுடனும் (உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதனை நீர் பார்க்கவில்லையா?)
- அவர்கள் நகரங்களில் வரம்பு மீறிச் செயல்பட்டனர்.
- அவர்கள் அவற்றில் குழப்பம் விளைவிப்பதில் மிக மிஞ்சி விட்டனர்.
- எனவே உமது இறைவன் அவர்கள் மீது தண்டனையின் சாட்டையை விழச் செய்தான்.
- நிச்சயமாக உமது இறைவன் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
- மனிதனைப் பொருத்தவரை, அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனுக்குக் கண்ணியமளித்து, அவனுக்கு அருள் செய்யும் போது, என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்று அவன் கூறுகின்றான்.
- ஆனால், அவன் அவனைச் சோதித்து, அவனது வாழ்விற்குரியவற்றை அவனுக்குக் குறைவாகக் கொடுக்கும் போது, என் இறைவன் என்னை இழிவுபடுத்தியுள்ளான் என்று அவன் கூறுகின்றான்.
- அவ்வாறன்று; மாறாக, (தவறு உங்களுடையது தான்) நீங்கள் அனாதைகளைக் கண்ணியப்படுத்தவில்லை.
- மேலும், ஏழைக்கு உணவளிக்குமாறு நீங்கள் ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை;
- மேலும், (மற்றவர்களின்) பரம்பரைச் சொத்தை முழுவதுமாக விழுங்குகின்றீர்கள்;
- மேலும், நீங்கள் செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கின்றீர்கள்.
- கவனமாகக் கேளுங்கள்! பூமி பல துண்டுகளாக முற்றிலும் தகர்க்கப்பட்டு4,
- வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில், உமது இறைவன் வருகை தருவான்5.
- அந்நாளில் நரகம் (அருகில்) கொண்டு வரப்படும்6. அந்நாளில் மனிதன் போதனையைப் பெற விரும்புவான். ஆனால் அப்பொழுது போதனையைப் பெற்று அவனுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? 7
- (இங்குள்ள) என் வாழ்விற்காக(ச் சில நற்செயல்களை) நான் அனுப்பியிருக்க வேண்டியதிருந்ததே என்று அவன் கூறுவான்8.
- எனவே, அந்நாளில் அவனுடைய (இறைவனுடைய) தண்டனையைப் போன்று வேறெவராலும் தண்டனை கொடுக்க இயலாது.
- அவனது பிடியைப் போன்று வேறெவராலும் பிடிக்க இயலாது.
- நிம்மதியடைந்த ஆன்மாவே!
- நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் (உன்னிடம்) திருப்தியடைந்தவாறும் (அவனிடம்) திரும்பி வருக9.
- தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக10. (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்).
- மேலும் நீ என் தோட்டத்தில் நுழைந்து விடுக. ரு1