அதிகாரம்: அல்பலத்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 21
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (நீங்கள் கூறுவது போல்) இல்லை; நான் இந்த (மக்கா) நகரத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்.
- (முஹம்மதே!) நீர் இந்த நகரத்திற்கு (மீண்டும்) வருவீர்.
- தந்தையையும், மகனையும் சான்றாகக் காட்டுகிறேன்1.
- நிச்சயமாக, நாம் மனிதனைக் கடின உழைப்பாளியாகப் படைத்துள்ளோம்2.
- தனக்கு மேல் எவனுக்கும் ஆற்றல் இல்லை என அவன் நினைக்கின்றானா?3
- நான் (ஊதாரித்தனமாகச் செலவு செய்து) ஏராளமான பணத்தை அழித்து விட்டேன் என்று அவன் கூறுகின்றான்4.
- தன்னை எவனும் பார்க்கவில்லையென்று அவன் நினைக்கின்றானா?5
- நாம் அவனுக்கு இரண்டு கண்களைக் கொடுக்கவில்லையா?6
- ஒரு நாவையும், இரண்டு உதடுகளையும்7 (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா?).
- நாம் அவனுக்கு (நேர்வழி, வழிகேடு ஆகிய) இரண்டு இலக்குகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளோம்8.
- ஆனால் அவன் சிகரத்தை அடைய முயலவில்லை9.
- சிகரத்தை அடைதல் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது யாது?
- (அது) அடிமையை விடுதலை செய்வதாகும்;
- அல்லது பசியுடைய நாளில் உணவளிப்பதாகும்;
- நெருங்கிய உறவினராகிய ஓர் அனாதைக்கு10,
- அல்லது மண்ணில் வீழ்ந்து கிடக்கும் ஏழைக்கு11 (உணவளிப்பதாகும்).
- பின்னர் அவன், நம்பிக்கை கொள்பவர்களையும், விடாமுயற்சியுடன் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களையும், ஒருவருக்கொருவர் கருணை புரியுமாறு அறிவுரை கூறுபவர்களையும் சேர்ந்தவனாகி விடுவதுமாகும்12.
- இத்தகையவர்களே அருளுக்குரியவர்களாவர்.
- ஆனால், எம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்கள், பேறிழந்தவர்களேயாவர்.
- அவர்களை நெருப்பு மூடிக் கொள்ளும். ரு1