அதிகாரம்: அஷ் ஷம்ஸ்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 16
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- சூரியனையும், (அது தோன்றி, உயர்ந்து செல்கையில்) அதன் ஒளியையும் சான்றாகக் காட்டுகிறேன்1.
- அதனைப் பின் தொடர்ந்து வரும் சந்திரனையும்2,
- அதனை வெளிப்படுத்தும் பகலையும்3,
- அதனைத் திரையிடும் இரவையும்4,
- வானையும், அது உருவாக்கப்பட்டிருப்பதையும்5,
- பூமியையும், அது விரிவுபடுத்தப்பட்டிருப்பதையும்,
- மனித ஆன்மாவையும், அது குறையின்றி முழுமையாக்கப்பட்டிருப்பதையும் (சான்றாகக் காட்டுகிறேன்) 6.
- அவன் (அல்லாஹ்) அதற்கு எது தவறானதென்பதையும், எது சரியானதென்பதையும் தெளிவாகத் தெரிவித்து விட்டான்.
- எனவே அதனை (ஆன்மாவினை)த் தூய்மைப்படுத்துபவன் நிச்சயமாக வெற்றி பெறுகின்றான்;
- அதனை (பாவத்தில்) அமுக்கி விடுபவன் முற்றிலும் அழிந்து விடுகின்றான்.
- ஸமூது இனத்தினர் தங்களுடைய வரம்பு மீறுதலின் காரணமாக (இறைத் தூதரை)ப் பொய்ப்படுத்தினர்.
- அவர்களுள் மிகப் பேறிழந்த ஒருவன் (அந்தக் காலத்தின் தூதரை எதிர்க்க) எழுந்த போது,
- அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் ஸமூது இனத்தவரை நோக்கி:) நீங்கள் அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தைத் தனியாக விட்டு விடுங்கள்; அது தண்ணீர் அருந்துவதற்கு அனுமதி அளியுங்கள் என்று அவர்களிடம் கூறினார்.
- ஆனால் அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் காலைத் துண்டித்து விட்டனர். எனவே அவர்களின் இறைவன், அவர்களது பாவத்தின் காரணமாக அவர்களை முற்றாக அழித்து, அவர்களைத் தரைமட்டமாக்கி விட்டான்.
- அவன் அவர்களின் முடிவிற்காகக் கவலைப்படவில்லை. ரு1