92- அல் லைல்


அதிகாரம்: அல் லைல்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 22
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன்1.
  3. அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன்2.
  4. ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்3.
  5. நிச்சயமாக உங்கள் முயற்சிகள் வெவ்வேறானவையாகும்4.
  6. எனவே, எவர் (இறை வழியில்) கொடுத்து (செலவு செய்து), இறையச்சத்தை மேற்கொண்டு,
  7. உண்மையை நிரூபிக்கின்றாரோ,
  8. நிச்சயமாக, நாம் அவருக்கு வசதியை வழங்குவோம்.
  9. ஆனால் எவன் கருமித்தனம் செய்து, அலட்சியம் செய்து,
  10. உண்மையைப் பொய்ப்படுத்துவானோ;
  11. நிச்சயமாக, நாம் அவனுக்குத் துன்பத்தை நோக்கிச் செல்லும் பாதையை எளிதாக்குவோம்.
  12. அவன் அழிவிற்குள்ளாகும் போது, அவனது செல்வம் அவனுக்கு எந்தப் பயனும் அளிக்காது.
  13. நிச்சயமாக, (நேர்) வழி காட்டுவது எமது பொறுப்பாகும்.
  14. மேலும், மறுமையும், இம்மையும் எமக்குரியவையேயாகும்.
  15. எனவே, சுடர் விட்டெரியும் நெருப்பைப் பற்றி உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்.
  16. மிகப் பேறிழந்தவனைத் தவிர வேறெவனும் அதில் நுழைய மாட்டான்.
  17. (மேலும் உண்மையைப்) பொய்ப்படுத்தி, புறக்கணிக்கின்றவனும் (அதில் நுழைய மாட்டான்.)
  18. மேலும் மிகுந்த இறையச்சமுடையவர் அதிலிருந்து தொலைவிலேயே வைக்கப்படுவார்.
  19. அவரோ தாம் தூய்மையடைய தமது செல்வத்தை (இறை வழியில்) வழங்குவார்.
  20. மேலும் எவருக்கும் திருப்பிச் செய்ய வேண்டிய உபகாரம் எதுவும் அவருக்கு இராது.
  21. மாறாக, (அவர் தமது செல்வத்தை) மிக்க மேன்மைக்குரிய தமது இறைவனின் திருப்தியைத் தேடவே (வழங்குகின்றார்).
  22. விரைவில் (அவரைப் பற்றி) அவன் திருப்தியடைவான். ரு1
Powered by Blogger.