அதிகாரம்: அல் அலக்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (எல்லாவற்றையும்) படைத்த உமது இறைவன் பெயரால் ஓதுவீராக!
- அவன் மனிதனை உறைந்த திரவத்திலிருந்து படைத்தான்.
- ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கண்ணியத்திற்குரியவனாவான்1.
- அவன் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- அவன் மனிதனுக்கு, அவன் அறியாததைக் கற்றுக் கொடுத்தான்.
- (அவர்கள் நினைப்பது போன்று) அன்று! மாறாக, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகின்றான்,
- ஏனெனில், அவன் தன்னைத் (இறையருளின்) தேவையற்றவன் எனக் கருதுகின்றான்.
- நிச்சயமாக உமது இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
- (செவியேற்பவரே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?2
- ஓர் அடியாரை, அவர் தொழும் போது (தடுப்பவனை நீர் பார்த்தீரா?)
- எனக்குச் சொல்வீராக. அவர் நேர்வழியில் இருந்தார் என்றால்,
- அல்லது நன்மையை ஏவினார் (என்றால், தடுப்பவனின் நிலை என்ன ஆகும்?).
- (தடுக்கின்ற) அவன் நிராகரித்துப் புறக்கணித்தான் என்றால், (அவனது முடிவு என்னவாகும் என்பதை ) நீர் எனக்குச் சொல்வீராக.
- அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிவதில்லையா?
- (அவன் விரும்புவது போன்று) அன்று; மாறாக அவன் (அச் செயலிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையாயின், நாம் அவனுடைய முன் உச்சி முடியை பிடித்து வேகமாக இழுப்போம்.
- பொய்யுரைத்துப் பாவம் செய்யக்கூடிய முன் உச்சி முடியை3
- எனவே அவன் தனது குழுவினரை அழைக்கட்டும்.
- நாமும் எம்முடைய காவலர்களை அழைப்போம்4.
- (பகைவன் விரும்புவது போன்று) அன்று. நீர் அவனுக்கு இணங்காமல், சிரம் பணிந்து வணங்கி, (இறைவனை) நெருங்கிக் கொண்டிருப்பீராக. ரு1